கோவில்களில் கார்த்திகை தீப திருவிழா; சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

நெல்லை மாவட்டத்தில் கோவில்களில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

Update: 2022-12-06 20:44 GMT

நெல்லை மாவட்டத்தில் கோவில்களில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

திருக்கார்த்திகை

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு நெல்லையப்பர் சன்னதியில் நந்தி முன்பு மேளதாளம் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து யாகம் வளர்த்து சிறப்பு ஹோமமும், பூர்ணாகுதி, தீபாராதனையும் நடந்தது.

நேற்று மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு 7.30 மணிக்கு சுவாமி-அம்பாள் ரி‌‌ஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலில் இருந்து நெல்லை டவுன் சுவாமி சன்னதி முன்பு உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார்கள். நேற்று முன்தினம் கோவிலில் ஏற்றப்பட்ட பரணி தீபம் மேளதாளம், பஞ்ச வாத்தியங்கள் முழங்க சொக்கப்பனை முக்கிற்கு கொண்டு வரப்பட்டு அங்கு வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

சொக்கப்பனை

இரவு 8 மணிக்கு பரணி தீபத்தில் இருந்து தீபம் எடுத்து சென்று சுவாமியிடம் அனுமதி பெற்று வரப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் 'தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவருக்கும் இறைவா போற்றி' என்ற பக்தி கோ‌‌ஷங்களை எழுப்பினார்கள். சொக்கப்பனை தீ அணைந்ததும் அதில் இருந்து சாம்பலை எடுத்து நெய் விட்டு மையாக்கி சுவாமி-அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

இதைத்தொடர்ந்து அம்மன் சன்னதி முன்பு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. இரவு 9 மணிக்கு சுவாமி-அம்பாள் ரி‌‌ஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் வீதிஉலா நடந்தது.

சாலைக்குமாரசாமி கோவில்

இதேபோல் நெல்லை சந்திப்பு சாலைகுமாரசாமி கோவில், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில், குட்டத்துறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் கோவில், மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவில், டவுன் புட்டாபுரத்தி அம்மன் கோவில், நெல்லை சந்திப்பு கைலாசநாதர் கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், சிந்துபூந்துறை விசுவநாதசெல்வி அம்மன் கோவில், கொக்கிரகுளம் முத்தாரம்மன் கோவில், புதுஅம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் திருக்கார்த்திகை திருவிழாவையொட்டி சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

கொழுக்கட்டை படையல்

நெல்லை சந்திப்பு கைலாசபுரம் இறக்கம் தாமிரபரணி ஆற்றில் தைப்பூசமண்டபம் அருகே உள்ள ஒத்தப்பனை சுடலைமாடசாமி கோவிலில் திருக்கார்த்திகையையொட்டி நேற்று மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது. சுவாமிக்கு பனை ஓலையால் செய்யப்பட்ட கொழுக்கட்டை படையல் போடப்பட்டது. பின்னர் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பொதுமக்கள் வீடுகளிலும் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

சேரன்மாதேவி

இதேபோல் சேரன்மாதேவி கொழுந்துமாமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலை உற்சவர் திருவீதி உலாவும், கொழுந்துமாமலை உச்சியில் தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவண்ணாமலைக்கு அடுத்தப்படியாக இந்தக் கோவிலில் தான் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. இங்கு ஏற்றப்படும் தீபங்கள் அண்ணாமலையார், உண்ணாமலை அம்பாளாக பாலசுப்பிரமணியருக்கு காட்சி தருவதாக ஐதீகம். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வள்ளியூர்

வள்ளியூர் ஸ்ரீபுரம் முத்துகிருஷ்ண சுவாமிகளின் 109-வது குருபூஜை மற்றும் குரு ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சூட்டு பொத்தை மலைமீது பரண் அமைக்கப்பட்டு அதில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதனை காண வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

களக்காடு

களக்காடு சத்தியவாகீஸ்வரர்- கோமதி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது. பின்னர் சுவாமி-அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். சுவாமி, அம்பாள் தேரடி அருகே வந்ததும் அங்கு கட்டப்பட்டிருந்த இரு சொக்கப்பனைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்