கார்த்திகை தீபத்திருவிழா: வருகிற 30-ந் தேதி அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் முகூர்த்த விழா...!

தீபத்திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் முகூர்த்த விழா 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

Update: 2022-09-27 18:58 GMT

திருவண்ணாமலை,

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா மிகவும் விசேஷமானதாகும்.

இவ்விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 24-ந் தேதியன்று தொடங்கி டிசம்பர் மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் டிசம்பர் மாதம் 6-ந் தேதி மாலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் ஏற்றப்பட உள்ளது. தீபத்திருவிழாவினை முன்னிட்டு பூர்வாங்க பணிகள் தொடங்குவதற்கான பந்தக்கால் நடும் முகூர்த்த விழா வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெற உள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்