தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா: "எப்படி பெறுவது என்பது எங்களுக்கு தெரியும்.." - அமைச்சர் துரைமுருகன்
ஒவ்வொரு முறையும் சுப்ரீம் கோர்ட்டு சென்று தான் நாம் தண்ணீரை பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.;
வேலூர்,
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தம் அருகே கற்பகம் கூட்டுறவு பெட்ரோல் விற்பனை நிலையத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று திறந்து வைத்தார். கலெக்டர் சுப்புலெட்சுமி, கதிர்ஆனந்த் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், மத்திய அரசு சொன்னாலும் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம் என்று சித்தராமையா சொல்லியுள்ளாரே? என நிருபர்கள் கேட்டதற்கு, என்றைக்காவது எந்த மந்திரியாவது தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவோம் என்று கூறி கேள்விப்பட்டது உண்டா?. எப்போது பார்த்தாலும் இப்படி தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு முறையும் சுப்ரீம் கோர்ட்டு சென்று தான் நாம் தண்ணீரை பெற்றுக் கொண்டிருக்கிறோம். தண்ணீரை கர்நாடகாவில் இருந்து எப்படி பெறுவது என்று எங்களுக்கு தெரியும்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, ராஜ்யசபாவில் அ.தி.மு.க. எதிர்த்து வாக்களித்து இருந்தால், இந்த சட்டமே வந்திருக்காது. காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை முடிந்ததும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிடப்படும் என்றார்.