திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கர்நாடக போலீசார் சோதனை

பெங்களூருவில் இளம்பெண் மீது ஆசிட் வீசிய வாலிபர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தங்கியிருந்த பகுதி குறித்து கர்நாடக போலீசார் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-06-04 17:58 GMT

திருவண்ணாமலை

பெங்களூருவில் இளம்பெண் மீது ஆசிட் வீசிய வாலிபர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தங்கியிருந்த பகுதி குறித்து கர்நாடக போலீசார் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆசிரமத்தில் வாலிபர் கைது

கர்நாடக மாநிலம் பெங்களூரு சுங்கத்கட்டே பகுதியை சேர்ந்தவர் நாகேஷ் (வயது 29). இவா், ஹெக்கனஹள்ளி கிராஸ் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்து உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 28-ந்தேதி நாகேஷ், இளம்பெண் வேலை செய்த தனியார் நிறுவனத்திற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி உள்ளார். அதற்கு அவர் மறுத்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நாகேஷ் திடீரென ஆசிட்டை இளம்பெண்ணின் முகத்தில் வீசினார். அதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பெங்களூரு காமாட்சிபாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 7 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நாகேஷ் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாமியார்களுடன் சாமியாராய் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை தனிப்படை போலீசார் கடந்த மாதம் 13-ந்தேதி திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தியானத்தில் இருக்கும் போது சுற்றி வளைத்து கைது செய்தனர்.

போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற போது தப்பியோட முயற்சி செய்தார். அப்போது அவரை துப்பாக்கி சூடு நடத்தி போலீசார் பிடித்தனர். இதில் அவருக்கு காலில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்போது அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

கர்நாடக போலீசார் சோதனை

இந்த நிலையில்  திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கர்நாடக மாநில போலீசார் ஆம்புலன்ஸ் மற்றும் காரில் வந்து பல்வேறு பகுதியில் சோதனை நடத்தினர். மேலும் செங்கம் சாலையில் உள்ள சிங்கமுக தீர்த்த குளத்தின் பின்புறம் வனப்பகுதியில் சோதனை நடத்தினர்.

கர்நாடக போலீசாரின் சோதனை குறித்து அப்பகுதியில் தகவல் பரவியது. இதனால் அங்கு மக்கள் திரண்டனர். இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அந்த சமயத்தில் கர்நாடக போலீசார் வனப்பகுதியில் இருந்து ஒரு பையுடன் வெளியே வந்தனர். அவர்களிடம், திருவண்ணாமலை போலீசார் சோதனை குறித்து விவரங்களை கேட்டறிந்தனர்.

இந்த சோதனையின் போது அடையாளம் காண்பிப்பதற்காக ஆம்புலன்சில் நாகேஷை போலீசார் அழைத்து வந்து உள்ளனர். சோதனைக்கு பின்னர் கர்நாடக போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பின்னர் அங்கிருந்தவர்களை திருவண்ணாமலை டவுன் போலீசார் கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.

இந்த சம்பவத்தினால் திருவண்ணாமலை கிரிவலப்பாதை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்