கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் பயண நேரம் 40 நிமிடங்கள் குறைக்கப்படுகிறது
ரெயிலின் வேகம் அதிகரிக்கப்படுவதால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் 40 நிமிடங்கள் குறைக்கப்படுகிறது. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நாகர்கோவில்,-
ரெயிலின் வேகம் அதிகரிக்கப்படுவதால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் 40 நிமிடங்கள் குறைக்கப்படுகிறது. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்
குமரி மாவட்டத்தில் இருந்து இயக்கப்படும் ரெயில்களில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் மிகவும் முக்கியமானது ஆகும். கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 1994-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட முதல் ரெயில் என்ற பெருமை இதற்கு உண்டு.
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் மாலை 5.05 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு நெல்லைக்கு வெகு சீக்கிரம் சென்றுவிடும். பின்னர் நெல்லையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நிறுத்தி வைக்கப்படுகிறது. அதன்பிறகு புறப்படும் ரெயில் சென்னை எழும்பூருக்கு மறுநாள் காலை 6.10 மணிக்கு சென்றடைகிறது. இதனால் பயணிகள் சற்று சிரமம் அடைந்து வந்தனர்.
அக்டோபர் 20-ந் தேதி
இந்தநிலையில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு நெல்லையில் வெகு நேரம் நிறுத்தி வைக்கப்படும் முறை தவிர்க்கப்பட உள்ளது. இந்த மாற்றமானது அக்டோபர் 20-ந் தேதி முதல் நடைமுறைக்கு வர இருப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக ரெயிலானது இனி கன்னியாகுமரியில் இருந்து தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதாவது மாலை 5.05 மணிக்கு பதிலாக 5.45 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட உள்ளது. இதன் மூலம் 40 நிமிடங்கள் பயண நேரம் குறைந்துள்ளது. மேலும் நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு 5.25 மணிக்கு பதிலாக 6.07 மணிக்கு வந்து 7.20 மணிக்கு நெல்லை செல்லும். அதே சமயம் சென்னைக்கு வழக்கமான நேரத்தில் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஐலேண்டு எக்ஸ்பிரஸ்
மதுரை முதல் சென்னை வரை உள்ள ரெயில் பாதையில் இருவழிபாதை பணிகள் 100 சதவீதம் முடிவடைந்துள்ளது. மதுரை முதல் நாகர்கோவில் வரை உள்ள இருவழிபாதை பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக ரெயில்வே அதிகாரிகள் கூறினர்.
இதே போல திருவனந்தபுரம் கோட்டயம் பகுதியில் உள்ள இருவழிபாதை பணிகள் நிறைவு பெற்று விட்டதால் பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி வரும் ஐலேண்டு ரெயில் வேகமும் அதிகரிக்கப்பட்டு பயண நேரம் குறைக்கப்பட்டு உள்ளது. அதன்படி திருவனந்தபுரத்துக்கு 12.40 மணிக்கு வர வேண்டிய ஐலேண்டு எக்ஸ்பிரஸ் இனி பகல் 12.10 மணிக்கு வந்துவிடும். நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு மதியம் 3.10 மணிக்கு பதிலாக 1.55 மணிக்கு வந்தடையும். மாலை 4 மணிக்கு பதிலாக இனி மதியம் 3.05 மணிக்கே கன்னியாகுமரி வந்துவிடும். இதன் மூலம் 55 நிமிடங்கள் பயண நேரம் குறைந்துள்ளது. இந்த மாற்றம் நாளை (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வர உள்ளது.
பயணிகள் சங்கம் வலியுறுத்தல்
இதற்கிடையே நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் ரெயில் உள்பட மேலும் சில ரெயில்களின் வேகத்தையும் அதிகரித்து பயண நேரத்தை குறைக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்க தலைவர் ஸ்ரீராம் மற்றும் நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.