சுற்றுலா பயணிகள் இன்றி கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடியது

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதால் கன்னியாகுமரி சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2023-06-12 18:45 GMT

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதால் கன்னியாகுமரி சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

சுற்றுலா தலம்

உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். இதனால் இந்த 3 மாத காலமும் கன்னியாகுமரியின் சீசன் காலமாக கருதப்படுகிறது.

அதேபோல ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாட சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். இதனால் இந்த 2 மாத காலமும் இங்கு கோடை விடுமுறை சீசனாகும்.

வெறிச்சோடி...

பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. ஜூன் மாதம் 12-ந்தேதி பள்ளிக்கூடம் திறப்பு தள்ளி வைக்கப்பட்டதால், நேற்றுமுன்தினம் வரை கன்னியாகுமரியில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளாக காட்சி அளித்தனர்.

இந்தநிலையில் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்து விட்டது. மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரைப்பகுதி, காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், கடற்கரையில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள், அரசு பழ தோட்டத்திலுள்ள சுற்றுச்சூழல் பூங்கா, அரசு அருங்காட்சியகம் போன்றவை சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. இதனால் கடைகளில் வியாபாரம் இன்றி வியாபாரிகள் கவலையடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்