ஊட்டி
நீலகிரி மாவட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இயக்கம் சார்பில், கஞ்சி கலய ஊர்வலம் ஊட்டியில் நேற்று நடைபெற்றது. இதில் முளைப்பாரி, அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது கும்மியாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஊட்டி மத்திய பஸ் நிலைய பாறை முனீஸ்வரர் கோவில் அருகில் இருந்து ஊர்வலம் தொடங்கி மெயின் பஜார், மாரியம்மன் கோவில் சாலை, கமர்சியல் சாலை, கோத்தகிரி சாலை வழியாக ஊட்டி அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள ஆதிபராசக்தி ஆன்மிக வழிபாட்டு மன்றத்தை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட ஆதிபராசக்தி குழு நிர்வாகத்தினர் மற்றும் அனைத்து ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர். பின்னர் அங்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக ஊர்வலத்தை ஒட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.