அரசியலில் பெண்களுக்கு சவால்கள் அதிகம்

அரசியலில் பெண்களுக்கு சவால்கள் அதிகம் என அருப்புக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசினார்.

Update: 2023-04-13 18:45 GMT

அருப்புக்கோட்டை, 

அரசியலில் பெண்களுக்கு சவால்கள் அதிகம் என அருப்புக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசினார்.

பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி

அருப்புக்கோட்டையில், விருதுநகர் மாவட்டம் தமிழ் இணைய கல்வி கழகம் சார்பில் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி திட்ட உரையாற்றினார். சமூக நீதிக்கான தலைப்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருத்துரை வழங்கினார். திசையும் திசைகாட்டியும் என்ற தலைப்பில் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் கருத்துரை வழங்கினார். முன்னதாக திட்ட அறிமுக காணொலி காட்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகளின் கேள்விகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பதிலளித்தார். பெண் என்பவர்கள் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை. அவர்களால் முடியாதது எதுவும் இல்லை. ஒரு பொதுத்தளத்தில் பெண்ணாக இருக்க கூடியவர்களுக்கு சவால்கள் அரசியலில் அதிகமாக உள்ளது.

சமூக நீதி

சமூக வலைதளங்களில் பெண் அரசியல்வாதிகளுக்கு எதிர்வினைகள் அதிகமாக உள்ளது. ஆண் கருத்து தெரிவித்தால் அந்த கருத்துக்கு மட்டுமே பதில் அளிப்பார்கள். அதே பெண் கருத்து தெரிவித்தால் அவரை பற்றி தனிப்பட்ட விமர்சனங்கள் வரும். அதையெல்லாம் நான் பொருட்படுத்துவதில்லை. அனைத்தையும் தாண்டி செல்வதுதான் எனது வழி.

சமூக வலைதளங்களை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர். எது உண்மை எது பொய் என்பதை உணர்ந்து சமூக நீதிக்கு சென்று இந்த உலகை மாற்ற வேண்டும் என்று பேசினார். 

Tags:    

மேலும் செய்திகள்