`தமிழின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமை'-கனிமொழி எம்.பி. பேச்சு

தமிழின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமை நமக்கு உள்ளது, என்று கனிமொழி எம்.பி. பேசினார்

Update: 2022-11-26 20:44 GMT

தமிழின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமை நமக்கு உள்ளது, என்று கனிமொழி எம்.பி. பேசினார்.

கனிமொழி எம்.பி.

நெல்லையில் பொருநை இலக்கிய திருவிழா நேற்று தொடங்கியது. இந்த நிலையில் கனிமொழி எம்.பி. நேற்று மாலை இந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இலக்கிய விழாக்கள் அதிகமாக நடத்தப்படுகிறது. தமிழை வளர்க்கவே இந்த விழாக்கள் நடத்தப்படுகிறது. முன்பு மதுரை, சென்னையில் மட்டும் புத்தக திருவிழாக்கள் நடத்தப்படும். தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மாவட்டந்தோறும் புத்தக திருவிழா நடத்துவதால், அனைத்து மக்களுக்கும் எளிதாக புத்தகங்கள் கிடைக்கிறது.

புத்தகம் வாசிப்பு என்பது மிக முக்கியம் ஆகும். கேரளா மாநிலத்தில் கோவில் விழாக்களை இலக்கியம் சார்ந்து நடத்துகிறார்கள். ஆனால் தமிழகத்தில் இலக்கியத்தையும், இலக்கியவாதிகளையும் கொண்டாடுவதில்லை. அதை மறந்து விட்டார்கள். மறந்து போனதை உருவாக்கி தருவது இந்த இலக்கிய திருவிழா.

அண்ணா-கருணாநிதி

புத்தகங்கள் நம்மை சரியான திசையில் அழைத்து செல்லும். படிக்க, படிக்க சிந்தனைகள் விரிவாகும். புத்தகம் படித்த தலைவர்களே நம்மை சரியான திசையில் அழைத்து செல்வார்கள். முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோர் இறுதி மூச்சு வரை புத்தகங்களை வாசித்தார்கள்.

திராவிட எழுத்தாளர்களின் எழுத்துக்கள் சமூக சிந்தனையை மேம்படுத்தியது. சமூக மக்களின் விடுதலைக்காக திராவிட எழுத்தாளர்கள் எழுதினார்கள். 

இன்றைய சினிமாக்களில் கூட பெண்ணடிமை இருக்கிறது. ஆனால் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, மந்திரிகுமாரி திரைப்படத்தில் பெண் விடுதலை தொடர்பாக எழுதினார்.

தமிழை மீட்டெடுக்க...

தமிழை மீட்டெடுக்க வேண்டிய கால கட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். நமது மொழி, கலாசாரம் அழிந்து போய் விடக்கூடாது. தமிழகத்துக்குள் சாதி, மதத்தின் பெயரால் யாரும் நுழைந்து விட முடியாது. அதற்கு அன்று திராவிட எழுத்தாளர்கள் எழுதிய எழுத்துக்களே காரணம் ஆகும்.

இன்று தமிழை கொண்டாடுவதாக கூறுகிறவர்கள், தமிழுக்கு உரிய அங்கீகாரம் தரவில்லை. நீதிமன்ற மொழியில் அனுமதிக்க மறுக்கிறார்கள். கீழடியை ஏற்கவில்லை.

நமது இலக்கியம், கருத்துகள், சுய மரியாதையை காக்க தமிழின் பெருமையை புரிந்து கொள்ள வேண்டும். அவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமை நமக்கு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு, பொது நூலகத்துறை இயக்குனர் இளம் பகவத், கவிஞர் கலா பிரியா, எழுத்தாளர் பவா செல்லத்துரை, கவுன்சிலர் பேச்சியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் மகாதேவன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்