தூத்துக்குடியில் பனைமரம் முறிந்து பலியான குழந்தையின் குடும்பத்துக்கு கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆறுதல்

தூத்துக்குடியில் பனைமரம் முறிந்து பலியான குழந்தையின் குடும்பத்துக்கு கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆறுதல் கூறினர்.;

Update: 2022-07-05 11:53 GMT

தூத்துக்குடியில் பனை மரம் முறிந்து விழுந்து பலியான குழந்தையின் குடும்பத்துக்கு கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

குழந்தை சாவு

தூத்துக்குடி கே.வி.கே.நகரை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவருடைய மகள் முத்துபவானி (வயது 1). இவள் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு தனது அத்தை ராஜேசுவரி (40) என்பவருடன் நின்று கொண்டு, பாட்டிலில் பால் குடித்துக் கொண்டு இருந்தாள்.

அப்போது எதிர்பாராதவிதமாக பலத்த காற்று காரணமாக அருகில் நின்ற பனை மரம் முறிந்து குழந்தை முத்துபவானி மீது விழுந்து அமுக்கியது. இதில் குழந்தை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. அருகில் நின்று கொண்டு இருந்த ராஜேசுவரி பலத்த காயம் அடைந்தார். அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆறுதல்

இந்த நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் இறந்த குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். தொடர்ந்து வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கினர். மேலும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ராஜேசுவரியையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அவருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரண உதவி வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்