காங்கயம் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க காங்கயம் வட்டாரத்தில் வாகன விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
சரிவிகித உணவு
காங்கயம் வட்டாரத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ், சிறுதானியங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டினை அதிகரிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த, வாகன பரப்புரையை காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் டி.மகேஷ்குமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
தற்போது சிறுதானியங்களை அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதற்கு முக்கிய காரணம் அரிசி சாதம் மட்டும் எடுத்துக் கொள்வதால் மாவுச்சத்து மட்டுமே நமக்குக் கிடைக்கிறது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சரிவிகித உணவு அவசியம்.
விழிப்புணர்வு பிரசாரம்
எனவே தாது உப்புக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து அதிகமுள்ள சிறுதானியங்களான சோளம், கம்பு, ராகி, வரகு, சாமை, திணை, குதிரைவாலி, பனிவரகு போன்ற பயிர்களின் சாகுபடி பரப்பை அதிகரித்து, உற்பத்தியை பெருக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் சபை 2023-ம் ஆண்டை "சர்வதேச சிறுதானியங்கள் தினமாக" அறிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக காங்கயம் வட்டாரத்தில் உள்ள 20 கிராமங்களில் சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த 3 வாகனங்கள் மூலம் தொழில்நுட்ப பிரசாரம் செய்யப்பட்டு, சிறுதானியங்களின் சாகுபடி முறைகள் குறித்த துண்டு பிரசுரங்களும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தாமணி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணைத் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தொழில்நுட்ப மேலாளர், மண்டல வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.