கந்த சஷ்டி திருவிழா: சேலம் முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹாரம்

கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சேலத்தில் உள்ள முருகன் கோவில்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

Update: 2022-10-29 19:00 GMT

கந்த சஷ்டி விழா

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் நடைபெறுகிறது. இதே போல் சேலம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது.

குறிப்பாக சேலம் ஜாகீர்அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தினமும் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று காவடி பழனியாண்டவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது.

இதையொட்டி இன்று காலை 7 மணிக்கு 36 தடவை சஷ்டி பாராயணமும், அதன்பிறகு 108 வலம்புரி சங்காபிஷேகமும் நடைபெறுகிறது. தொடர்ந்து மதியம் 12 மணிக்கு தங்க கவசம் சாத்துப்படியும், மாலை 4 மணிக்கு ஆட்டுக்கிடா வாகனத்தில் சண்முகநாதர் புறப்பட்டு சூரசம்ஹாரம் நடக்கிறது. நாளை (திங்கட்கிழமை) மதியம் 12 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

முருகன் கோவில்கள்

இதேபோல், சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சாமி கோவிலில் இன்று காலை 10 மணிக்கு திரளான பெண்கள் கலந்து கொண்டு கந்த சஷ்டி பாராயணம் பாடும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்படுகிறது. மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

அப்போது அம்மாப்பேட்டையில் மாடவீதிகள் வழியாக 8 இடங்களில் சூரனை முருகன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

மேலும் முத்துமலை முருகன் கோவில், ஊத்துமலை முருகன் கோவில், குமரகிரி தண்டாயுதபாணி சாமி கோவில், அடிவாரம் ஆறுபடை முருகன் கோவில், பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில், கந்தாஸ்ரமம் முருகன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹாரத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெறுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்