காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில்: வடகலை-தென்கலை பிரிவினரிடையே மீண்டும் மோதல்
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை - தென்கலை பிரிவினரிடையேயான மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தில் நடைபெறும் பார்வேட்டை திருவிழாவில் வரதராஜபெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
அதன்படி காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட வரதராஜ பெருமாள், முத்தியால்பேட்டை, அய்யன்பேட்டை, கருக்கு பேட்டை, திம்மராஜம்பேட்டை, கீழ் ஒட்டிவாக்கம், வெண்குடி, வாலாஜாபாத், புளியம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக மண்டகப்படி கண்டருளி பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலையின் மீது எழுந்தருளினார்.
சுவாமி பார்வேட்டைக்கு வரும்போது வடகலை, தென்கலை சார்ந்தவர்கள் "திவ்ய பிரபஞ்சம்" பாடுவது வழக்கம். இதில் வடகலை தென்கலை பிரிவினர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக யார் முதலில் திவ்ய பிரபஞ்சம் பாடுவது என்ற பிரச்னை உள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில் இந்த பிரச்னை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில் இருபிரிவினரும் திவ்ய பிரபஞ்சம் பாடகூடாது என கூறியது. அதற்கு மாற்றாக தோஸ்த்ர பாடம் எனப்படும் சமஸ்கிருத பாடல்கள் பாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று பார்வேட்டை உற்சவத்தின்போது வடகலை, தென்கலை பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென ஒருவருக்கொருவர் மாறி மாறி அடித்துக் கொண்டனர். அதுமட்டுமல்லாமல் கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு இரு பிரிவினர்களும் சென்றுவிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இவர்களின் சண்டையினால் சாமி தரிசனம் செய்ய வந்த மக்கள் அவதிக்கு உள்ளானர். இரு பிரிவினருக்கும் இடையே நடந்த அடிதடி சண்டை வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.