காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா - கொடியேற்றத்துடன்‌ தொடங்கியது

காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது‌.

Update: 2022-10-26 08:35 GMT

முருகபெருமானின் வரலாறான கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட பெருமைக்குரிய கோவிலாக திகழும் காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிறகு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து உற்சவர் ஆறுமுகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் மஞ்சள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தூபதீப ஆராதனைகளும் நடைபெற்றது.

விழா நடைபெறும் 6 நாட்களும் முருகபெருமான் காலையில் பல்லக்கிலும், மாலையில் ஆடு, மான், அன்னம், குதிரை வாகனங்களிலும் அலங்காரமாகி ராஜவீதிகளில் பவனி வரவுள்ளார்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சூரசம்ஹாரம் வரும் 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவிலின் முன்பாக நடைபெறுகிறது. 31-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு தெய்வானை திருக்கல்யாணமும், யானை வாகனத்தில் சாமி வீதியுலாவும் நடைபெறுகிறது. தினந்தோறும் இரவு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற உள்ளது.

ஏராளமான பக்தர்கள் கோவிலில் 108 முறை வலம் வந்து தங்களின் நேர்த்திக்கடனை சமர்ப்பித்தனர். மேலும் கந்த சஷ்டியையொட்டி பக்தர்கள் ஏராளமானோர் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் என்.தியாகராஜன், தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்