காமராஜர் சாலை விரிவாக்கப்பணிகள் மந்தம்

மின்கம்பங்கள் அகற்றப்படாததால் காமராஜர் சாலை விரிவாக்கப்பணிகள் மந்தமாக நடக்கிறது. விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-07-22 18:45 GMT

மின்கம்பங்கள் அகற்றப்படாததால் காமராஜர் சாலை விரிவாக்கப்பணிகள் மந்தமாக நடக்கிறது. விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

புதிய தார்ச்சாலை

மயிலாடுதுறை நகரில் செம்மங்குளம் முதல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வழியாக கண்ணாரத்தெரு முக்கூட்டு வரை நம்பர் 1 ரோடு என்று அழைக்கப்படுகின்ற காமராஜர் சாலை அகலப்படுத்தப்பட்டு இருபுறமும் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டு புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வருகிறது. சுமார் ரூ.6 கோடியே 50லட்சம் மதிப்பில் இத்திட்டம் நெடுஞ்சாலை துறை மூலம் நடைபெற்று வருகின்றது.

இத்திட்டத்தில் அந்த சாலையில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் 3 மின்மாற்றிகளை மாற்றியமைத்தல் போன்ற பணிகள் நடைபெறாத காரணத்தினால் சாலை அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை நகரத்தின் மையப் பகுதியில் வடக்கு பகுதியையும், தெற்கு பகுதியையும் இணைக்கக்கூடிய இணைப்பு சாலையாகவும், திருக்கடையூர், திருநள்ளாறு, பேரளம், மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் போன்ற ஆன்மிக ஸ்தலங்களுக்குச் செல்ல வேண்டிய சாலையாகவும் உள்ளது.

போக்குவரத்து கழக பணிமனை

மேலும் அந்த சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைந்துள்ளதால் தினமும் சுமார் 75-க்கும் மேற்பட்ட பஸ்கள் சென்று வருகின்றன.

மேலும் இச்சாலையில் தினமும் அதிகபடியான பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு அனைத்து தரப்பினரும் அதிகம் பயன்படுத்தும் இந்தசாலை மேம்பாட்டுப் பணிகள் தொய்வடைந்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து சமூகஆர்வலர் அப்பர்சுந்தரம் கூறியதாவது:-

இந்த சாலை பணி மந்தமாக நடைபெறுவது குறித்து அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் கேட்டபோது, அந்த சாலையில் உள்ள மின்கம்பங்கள் அகற்றப்பட்டு கொடுக்காததால்தான் புதிய சாலை அமைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

டெபாசிட் தொகை

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது சுமார் 25 மின்கம்பங்கள், 3 மின் மாற்றிகள் இருப்பதாகவும், இவற்றிற்கு இடம் மாறுதல் செய்யும் செலவினத்திற்காக ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அச்சாலையில் உள்ள 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மின்கம்பங்களை மாற்றுவதால் புதிய இணைப்புக்கான டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து சுமார் ரூ.60 லட்சம் வரை கூடுதலாக தேவைப்படுவதால் அச்செலவீனத்தை யார் ஏற்றுக் கொள்வது என்னும் நிலை உள்ளதால் முடிவெடுக்க முடியாமல் இருப்பதாக தெரிவித்தனர்.

ஏற்கனவே மின் இணைப்பு பெறுவதற்காக ஒவ்வொரு வீட்டில் இருந்தும் மின்சார வாரியத்திற்கு டெபாசிட் தொகை கட்டப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீண்டும் சாலை மேம்பாட்டு பணிக்காகவும் மின்கம்பம் நகர்த்தப்படும் தேவையை தெரிவித்து பயனாளிகளான பொதுமக்களிடம் டெபாசிட் தொகை கேட்பது என்பது நியாயமற்றதாகும். ஆகவே இத்தொகைகளை நகராட்சி நிர்வாகமோ, மின்சார வாரியமோ அல்லது நெடுஞ்சாலை துறையோ தான் ஏற்கவேண்டும் என்றார்.

எனவே இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் தலையிட்டு உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்