'கமல்ஹாசனின் அரசியல் சாயம் வெளுத்துவிட்டது' - வானதி சீனிவாசன் விமர்சனம்

தேர்தலில் போட்டியிட்டபோது கூட மக்களால் அணுக முடியாத நபராக கமல்ஹாசன் இருந்தார் என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

Update: 2024-03-09 14:34 GMT

கோவை,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் மற்றும் தி.மு.க. இடையே தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை பதவிக்கான தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது

ஆனால், எதிர்வரும் 2024 மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடப்போவதில்லை என்றும் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோம் என்றும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கமல்ஹாசனின் அரசியல் சாயம் வெளுத்துவிட்டதாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது கூட மக்களால் அணுக முடியாத நபராகத்தான் கமல்ஹாசன் இருந்தார். அதற்கான சரியான பதிலை கோவை தெற்கு தொகுதி மக்கள் அளித்தார்கள். இப்போது தேர்தலில் போட்டியிடும் மனநிலையில் இருந்து அவர் ஒருவேளை மாறியிருக்கலாம். அவர் தேர்தலில் போட்டியிடாதது எங்களுக்கும் ஏமாற்றம்தான்.

தமிழ்நாட்டில் மாற்றத்தை கொண்டு வரப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்த கமல்ஹாசன், எந்த கட்சியை அவர் விமர்சித்தாரோ அந்த கட்சியுடனேயே கூட்டணி அமைத்ததுள்ளார். எப்படியாவது ஒரு எம்.பி. ஆகிவிடமாட்டோமா என்ற எண்ணத்தில் கூட அவர் மாநிலங்களவை எம்.பி. பதவிக்காக உடன்பட்டிருக்கலாம்.

ஆனால், வேட்பாளராக நின்று மக்களிடம் பேசிய முடியாத அவர், பிரச்சாரத்திற்கு வந்து என்ன செய்யப்போகிறார்? தனது அரசியல் ஆசைக்காக மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான இடத்தை எடுத்துக் கொள்கிறார். அவர் ஒரு நட்சத்திர பேச்சாளர் என்பதற்காக அது அவருக்கு கொடுக்கப்படுகிறது.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பிறகு கூட அவர் இங்கு வந்து மக்களுக்கு ஏதாவது செய்திருக்கலாம். இங்கிருக்கும் பிரச்சினைகள் குறித்து பேசியிருக்கலாம். ஆனால் அதை அவர் செய்யவில்லை. தற்போது கமல்ஹாசனின் அரசியல் சாயம் வெளுத்துவிட்டது."

இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்