கமல்ஹாசன் காங்கிரசுக்கு ஆதரவுகொடுப்பதால் குழப்பம்தான் வரும்: எச்.ராஜா

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கமல்ஹாசன் காங்கிரசுக்கு கொடுக்கும் ஆதரவால் குழப்பம் தான் வரும், என்று திருச்செந்தூரில் எச்.ராஜா கூறினார்.

Update: 2023-01-27 18:45 GMT

திருச்செந்தூர்:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கமல்ஹாசன் காங்கிரசுக்கு கொடுக்கும் ஆதரவால் குழப்பம் தான் வரும், என்று திருச்செந்தூரில் எச்.ராஜா கூறினார்.

சாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் தனியார் விடுதியில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமிழை தேடி யாத்திரை மேற்கொள்ள போவதாக அறிவித்துள்ளார். தமிழை தேடி யாத்திரை என்றால், தமிழ் தொலைந்து விட்டது என்றுதான் அர்த்தம். தமிழை தொலைத்தது யார்? திராவிடம். திராவிடத்தை அழிக்காவிட்டால் தமிழை காப்பாற்ற முடியாது. ஏனென்றால் தமிழின் முதல் எதிரி திராவிடம்.

இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளர் என்று சொன்னதும் எதிர்க்கட்சி வேட்பாளரின் வெற்றி உறுதியாகிவிட்டது. ஏனென்றால் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மின் கட்டணம் மாதம் ஒருமுறை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி அவ்வாறு செய்ய முடியாது என கூறியுள்ளார்.

அதேபோல் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அதற்கு வாய்ப்பே இல்லை, என கூறியுள்ளார்.

எனவே தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியது எதுவுமே நிறைவேற்ற முடியாது என அந்தந்த துறை அமைச்சர்களே வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்கள்.

கமல்ஹாசன் ஆதரவு

அதனால் மக்கள் தி.மு.க. பக்கம் திரும்பி பார்க்க மாட்டார்கள். எனவே இடைத்தேர்தலில் எதிர்த்து போட்டியிடும் அதிர்ஷ்டசாலி யார்? என்றுதான் தெரிய வேண்டும்.

மேலும், இடைத்தேர்தலில் கமல்ஹாசன் காங்கிரசுக்கு கொடுக்கும் ஆதரவு குழப்பம்தான் வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் வினோத் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்