பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல்வீசிய கல்லூரி மாணவர் கைது
பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல்வீசிய கல்லூரி மாணவர் கைது.;
மதுரை,
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சென்னை வரும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மதுரை திருமங்கலம் ரெயில் நிலையத்தை கடந்து வந்து கொண்டிருந்தபோது, மர்மநபர் ஒருவர் ரெயில் மீது கல்வீசி தாக்கினார். இதில் ரெயிலில் பயணம் செய்த 2 பெண்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து மதுரை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், திருமங்கலம் கூழையாபுரத்தை சேர்ந்த கணேசன் மகன் முத்துமுனியாண்டி(வயது 21) என்பவர் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல் வீசியது தெரியவந்தது. இதையடுத்து அவரை நேற்று கைது செய்த ரெயில்வே போலீசார், மதுரை 6-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான முத்துமுனியாண்டி கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.