பாசன கால்வாய்களில் குவியும் குப்பைகள்

Update: 2022-09-17 17:25 GMT


பாசன கால்வாய்களில் தொடர்ந்து கொட்டப்பட்டு வரும் குப்பைகளால் ஏற்பட்டு வரும் நீண்ட நாள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீர் மேலாண்மை

பி.ஏ.பி. தொகுப்பு அணைகளிலிருந்து பெறப்படும் நீர் திருமூர்த்தி அணையில் இருப்பு வைக்கப்படுகிறது.அங்கிருந்து பாசனக் கால்வாய்களின் மூலம் திறந்து விடப்படும் தண்ணீர் சுமார் 3.75 லட்சம் ஏக்கர் விளைநிலங்களை வளமாக்குவதில் பங்கு வகிக்கிறது.இந்தநிலையில் பாசனக்கால்வாய்கள் மற்றும் கரைகளில் கொட்டப்படும் குப்பைகளால் பெருமளவு தண்ணீர் வீணாவதுடன் விளைநிலங்களும் பாழாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பி.ஏ.பி. திட்டம் எனப்படும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி கொண்டு வரப்பட்ட அற்புதமான திட்டமாகும்.திட்டம் வகுக்கப்பட்ட போதே பாசனக் கால்வாய்களின் பராமரிப்பு குறித்தும் திட்டமிடப்பட்டுள்ளது. நீர் மேலாண்மையில் நமது முன்னோர்கள் உலகத்துக்கே எடுத்துக்காட்டாக விளங்கியுள்ளனர். கால்வாய்களைப்பாதுகாக்கவும், நீர் பகிர்வை சீராக்கவும், நீர்த் திருட்டைத் தடுக்கவும் கரைக் காவலர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். ஆனால் காலப்போக்கில் ஒவ்வொருவராக ஓய்வு பெறும் போது மீண்டும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அதற்குப் பதிலாக தற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் பணி திறம்பட இல்லை.

குப்பைத் தொட்டிகள்

ஆரம்ப காலங்களில் பெரும்பாலும் வெற்று நிலங்களின் ஊடே சென்ற பாசனக் கால்வாய்கள் இப்போது பல கிராமங்கள் மற்றும் நகரங்களைக் கடந்து பயணிக்கும் நிலை உள்ளது.ஏராளமான விளைநிலங்கள் விலை நிலங்களாக மாறிவிட்டன. ஒவ்வொரு பகுதியிலும் டன் கணக்கில் குப்பைகள் குவிகின்றன.

அவற்றை முறையாக மேலாண்மை செய்யும் பொறுப்பு உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு உள்ளது. ஆனால் பல ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டில் இல்லை. வீடுதோறும் குப்பை சேகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதில்லை. எனவே குப்பைகளைக் கொட்டும் இடமாக மக்கள் கால்வாய்களைத் தேர்வு செய்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ஒருசில ஊராட்சிகளில் கால்வாய் கரைகளில் குப்பைத் தொட்டிகள் வைப்பது, ஊருக்குள் சேகரிக்கப்படும் குப்பைகளை கால்வாய் அருகில் குவித்து வைப்பது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர்.இதனால் காற்றில் பறக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் கால்வாயை ஆக்கிரமிக்கின்றன.இதுதவிர நாற்றமெடுக்கும் இறைச்சிக் கழிவுகள், பழைய துணிகள், படுக்கைகள், கற்கள், மரக்கட்டைகள் என அனைத்து விதமான கழிவுகளும் கால்வாயில் கொட்டப்படுகின்றன.இதனால் பாசனத்துக்கு நீர் திறக்கப்படும்போது தண்ணீரில் அடித்துச் செல்லப்படும் குப்பைகள் மடைகளில் அடைப்பை ஏற்படுத்துவதால் பாசன நீர் கரையை உடைத்து வெளியேறும் நிலை உள்ளது.மேலும் பாலிதீன் கழிவுகள் விளைநிலங்களில் தேங்கி மழைநீர் பூமிக்குள் செல்வதைத் தடுப்பதுடன் பயிர்களுக்கும் பலவிதமான பாதிப்புகளை உண்டாக்குகிறது.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

மேலும் செய்திகள்