கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் சீரமைப்பு பணிகள் தொடக்கம்

வாகன விபத்துகளை தடுக்கும் வகையில் கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் சீரமைப்பு பணிகளை சரி செய்து வருகின்றனர்.

Update: 2022-11-28 09:55 GMT

சென்னையில் இருந்து புதுச்சேரி செல்வதற்கு முக்கிய வழித்தடமாக கிழக்கு கடற்கரை சாலை அமைந்துள்ளது, நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன. மாநில நெடுஞ்சாலையாக இருந்த இந்த சாலை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் பராமரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக மாமல்லபுரம் முதல் கல்பாக்கம் வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் பல இடங்களில் இந்த சாலைகள் ஜல்லிகள் பெயர்ந்து சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் வளைந்து, வளைந்து வாகனங்களை ஓட்டும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அப்போது வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துகள் அதிகம் ஏற்பட்டு வந்தன. இரு சக்கர வாகன ஓட்டிகள் பலர் சாலை பள்ளத்தில் மோதி விழுந்து 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பள்ளத்தில் கவிழ்ந்தபோது இரு சக்கர வாகன ஓட்டிகள் 5 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இதனால் இந்த சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து பெரும் விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பாக கிழக்கு கடற்கரை சாலையில் உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று கல்பாக்கம் பகதி வாகன ஓட்டிகள் சார்பாக புதுப்பட்டினம் ஊராட்சி தலைவர் காயத்ரி தனபால் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று சாலை மேம்பாட்டு நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார். இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தினர் முதல் கட்டமாக கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மட்டும் சிதிலமடைந்த சாலைகளை தார் கலந்த ஜல்லிகள் மூலம் சரி செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்