கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தை நரிக்குறவர்கள் முற்றுகை
கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தை நரிக்குறவர்கள் முற்றுகையிட்டனா்.
கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் கிராமத்தில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 20 குடும்பங்களுக்கு எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது, அரசு வீடுகள் கட்டிகொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருவதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்து வந்தனர். இந்த நிலையில் 61 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் வருவாய்த்துறையினர், 21 குடும்பங்களுக்கு மட்டும் முடியனூர் எல்லையில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கியதாக தெரிகிறது. பட்டா வழங்கிய 21 பேருக்கும் எந்த இடம் என அளந்து கொடுக்கவில்லை. எனவே மீதமுள்ள 40 பேருக்கும் உடனடியாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், பட்டா வழங்கிய 21 நபர்களுக்குரிய இடத்தை அளந்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி நரிக்குறவர் இன மக்கள் நேற்று காலை கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த வருவாய்த்துறையினர், அங்கு விரைந்து வந்து இதுதொடர்பாக தாசில்தாரை சந்தித்து மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து அவர்கள் தாசில்தார் சத்தியநாராயணனை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையேற்ற நரிக்குறவர் இன மக்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.