கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டி என் பி எஸ் சி குரூப்-4 தேர்வை 42,600 பேர் எழுதுகிறார்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 142 மையங்களில் நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 42 ஆயிரத்து 600 பேர் எழுதுகிறார்கள் என கலெக்டர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி\
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் ஜடாவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குரூப்-4 தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு(டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-4 பதவிகளுக்கான எழுத்து தேர்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்காக மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என 143 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 42 ஆயிரத்து 600 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
பறக்கும்படை
இது தவிர தேர்வு மைய கண்காணிப்பு அலுவலர்கள் 143 பேர், மொபைல் டீம் 32 பேர், பறக்கும் படையினர் 7 பேரும் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் ஒவ்வொரு மையங்களுக்கும் ஒரு போலீசார் வீதம் 143 போலீசார், மொபைல் டீம் போலீசார் 32 பேர் மற்றும் கருவூலத்துக்கு 5 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.
தேர்வு மையம் மாற்றம்
இதற்கிடையே கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையமாக அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு 1200 பேர் தேர்வு எழுத இருந்தார்கள். ஆனால் கலவரத்தால் அந்த பள்ளி சூறையாடப்பட்டு இருப்பதால், இங்கு தேர்வு நடைபெறவில்லை. மேலும் அங்கு தேர்வு எழுத இருந்தவர்கள் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. சி.பி.எஸ்.இ. பள்ளி மற்றும் ஏ.கே.டி. மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆகிய இரு தேர்வு மையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.