கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை மகளிர் சுய உதவிக்குழுவினர் முற்றுகை

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை மகளிர் சுய உதவிக்குழுவினர் முற்றுகையிட்டனர்.

Update: 2022-07-04 15:00 GMT

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கல்வராயன்மலை மணியாா்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர் திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி மனுவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்க அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபுவை சந்தித்து கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

கல்வராயன்மலை மணியார்பாளையம் ஊராட்சி ஈச்சங்காடு, அருவங்காடு, மேல் ஆத்துக்குளி ஆகிய கிராமங்களில் உள்ள 24 பெண்கள் மற்றும் ஆண்கள் சுய உதவி குழுக்கள் உள்ளது. இந்த குழுக்கள் தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து கல்வராயன்மலை வட்டார வளர்ச்சி திட்டத்தின் உதவியுடன் மாதிரி விவசாய பண்ணை அமைக்க கடந்த 2009-ம் ஆண்டு ஈச்சங்காடு கிராமத்தில் 2 ஏக்கர் 68 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. அந்த நிலத்தை குழுக்களின் தற்காலிக தலைவரான குணசேகரனிடம் ஆண்டுக்கு ரூ.4 ஆயிரத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால் அந்த நபர் குத்தகை பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். எனவே இந்த இடத்தை வேறு நபருக்கு குத்தகைக்கு விட தீர்மானித்தோம். ஆனால் அவர் நிலத்தை கொடுக்க முடியாது என கூறி கொலை மிரட்டல் விடுத்தார். இந்த நிலத்தை அவருடைய மகள் பெயரில் கிரயம் செய்து கொடுத்திருப்பதாக தெரியவந்தது. இதுகுறித்து கரியாலூர் போலீசில் புகார் கொடுத்தோம். போலீசார் நடத்திய விசாரணையில், நிலத்தை ஒப்படைப்பதாக அவர் கூறினார். ஆனால் இதுநாள் வரை ஒப்படைக்கவில்லை. எனவே நிலத்தை மீட்டு தருவதோடு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு இதுகுறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்