அதிர்வேட்டுகள் முழங்க கள்ளழகர் இருப்பிடம் வந்து சேர்ந்தார் - பூசணிக்காய் சுற்றி, பூக்கள் தூவி பக்தர்கள் வரவேற்பு

சித்திரை திருவிழாவுக்கு மதுரை வந்துவிட்டு திரும்பிய கள்ளழகர் நேற்று இருப்பிடம் சேர்ந்தார். பூசணிக்காய் சுற்றியும், பூக்கள் தூவியும் பக்தர்கள் வரவேற்று தரிசித்தனர்.

Update: 2023-05-09 20:34 GMT

அழகர்கோவில்

சித்திரை திருவிழாவுக்கு மதுரை வந்துவிட்டு திரும்பிய கள்ளழகர் நேற்று இருப்பிடம் சேர்ந்தார். பூசணிக்காய் சுற்றியும், பூக்கள் தூவியும் பக்தர்கள் வரவேற்று தரிசித்தனர்.

சித்திரை திருவிழா

மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை பெருந்திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த விழாவானது கடந்த 1-ந்தேதி தொடங்கியது.

3-ந் தேதி மதுரைக்கு கள்ளழகர் புறப்பட்டார், 4-ந் தேதி மூன்று மாவடியில் எதிர் சேவை, 5-ந் தேதி வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளல் நடந்தது.

6-ந்தேதி சேஷ வாகனத்தில் காட்சி தந்தார். மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்ததுடன், அன்று இரவில் தசாவதார திருக்கோலங்களில் அருள்பாலித்தார்.

7-ந் தேதி இரவு பூப்பல்லக்கு சேவையும், நேற்று முன்தினம் காலையில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவில் முன்பு இருந்து பிரியாவிடை பெற்று கள்ளர் திருக்கோலத்தில் தங்கப்பல்லக்கில் அழகர் மலையை நோக்கி புறப்பட்டார்.

இருப்பிடம் வந்து சேர்ந்தார்

நேற்று காலை அழகர் மலையை அடைந்த அவர் 18-ம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பு வந்தார். அப்போது அதிர்வேட்டுகள் முழங்கின. பல வண்ண மலர்கள் தூவி பக்தர்கள் வரவேற்று தரிசித்தனர்.

இதை தொடர்ந்து 21 பூசணிக்காய்களை பெண்கள் வரிசையாக கைகளில் ஏந்தி, கற்பூரம் ஏற்றி பெரியவாச்சான் நுழைவு வாசல் வழியாக வந்த கள்ளழகருக்கு திருஷ்டி சுற்றினர். கோவிந்தா... கோவிந்தா... கோஷத்துடன் தரிசித்தனர். தொடர்ந்து தங்க பல்லக்கு பரிவாரத்துடன் கோவிலுக்குள் பகல் 11.15 மணிக்கு சென்று இருப்பிடம் சேர்ந்தார். இதைக்காண ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்தனர். நெல், தானியங்கள், கன்றுக்குட்டிகள் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தினர்.

இன்று விழா நிறைவு

சித்திரை திருவிழாவையொட்டி 480 மண்டபங்களில் அழகர் எழுந்தருளியது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 39 உண்டியல்கள் கொண்டு செல்லப்பட்டன. அந்த உண்டியல்களும் நேற்று திரும்பின,

இன்று (புதன்கிழமை) உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்