திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கால சம்ஹார திருவிழா

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி காலசம்ஹார விழா தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடந்தது.

Update: 2023-04-30 18:45 GMT

திருக்கடையூர்:

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி காலசம்ஹார விழா தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடந்தது.

சித்திரை திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வந்தன.

விழாவின் 6-ம் நாளான நேற்று கோவில் வளாகத்தில் தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கால சம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. சிவபக்தரான மார்க்கண்டேயரின் ஆயுள் 16 வயதில் முடிவடைந்ததை தொடர்ந்து மார்க்கண்டேயரின் உயிரை பறிக்க எமன் வந்தார். மார்க்கண்டேயர் 107 சிவாலயங்களை வணங்கி விட்டு 108-வதாக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். கோவிலில் மார்க்கண்டேயர் சிவபெருமானை தழுவி மந்திரங்கள் உச்சரித்து கொண்டிருந்தார். அப்போது மார்க்கண்டேயரை நோக்கி எமதர்மன் பாசக்கயிறை வீசியபோது மார்க்கண்டேயர் மீது மட்டும் பாசக்கயிறு விழாமல், சிவலிங்கத்தின் மீதும் விழுந்தது.

கால சம்ஹார மூர்த்தி

உடனே, கடும் கோபத்துடன் லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவபெருமான் எமனை தன் சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்ததாகவும், அப்போது மார்க்கண்டேயருக்கு என்றும் 16 வயதாக இருக்க அருள்பாலித்ததாகவும், இதன்மூலம் சிவபெருமான் கால சம்ஹாரமூர்த்தி என அழைக்கப்படுகிறார் என்பது வரலாறு.

அதன்படி, சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தன்று காலசம்ஹார மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்து காலனை வதம் செய்யும் காலசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக காலையில் நூற்றுக்கால் மண்டபத்தில் பாலாம்பிகா சமேத கால சம்ஹார மூர்த்தி மகா மண்டபத்தில் இருந்து நூற்றுக்கால் மண்டபத்திற்கு எழுந்தருளுகின்ற வீர நடன தரிசனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், குருக்கள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்