கசப்பு தன்மை இல்லாத பழுபாகற்காய்

வேதாரண்யம் பகுதியில் கசப்பு தன்மை இல்லாத பழுபாகற்காய் அதிகமாக விளைகிறது. இவை கிலோ ரூ.160-க்கு விற்பனையாகிறது.

Update: 2022-11-13 19:00 GMT

வேதாரண்யம் பகுதியில் கசப்பு தன்மை இல்லாத பழுபாகற்காய் அதிகமாக விளைகிறது. இவை கிலோ ரூ.160-க்கு விற்பனையாகிறது.

பழுபாகற்காய்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்காடு, கோடியக்கரை பகுதியில் கசப்பு தன்மை இல்லாத பழுபாகற்காய் அதிகமாக விளைகிறது. இந்த பழுபாகற்காய் அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிட கூடியதாகும். இப்பகுதி மக்கள் இறால், ஆட்டுக்கறி போன்றவற்றுடன் பழுபாகற்காயை சமைத்து சாப்பிடுகிறார்கள்.

காடுகளில் இயற்கையாக கிடைக்கும் இந்த பழுபாகற்காய் மிகுந்த ருசியாக இருக்கும். இது சீசன் காலத்தில் கோடியக்கரைக்கு வரும் பறவைகளுக்கும் உணவாகிறது. இந்த பழுபாகற்காயை தற்போது வேதாரண்யம் பகுதி விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பழுபாகற்காய் சீசன் காலமாகும். கடைகளில் ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.160 வரை விற்பனையாகிறது.

குட்டி பலாப்பழங்கள்

பச்சைப்பசேல் என குட்டி குட்டி பலாப் பழங்கள் போல இவை காட்சி அளிக்கின்றன. பந்தல் காய்கறிகள் வரிசையில் அதிகமான விலைக்கு விற்பனையாவதும் பழுபாகற்காய்கள் தான். கோவைக்காய் போல காட்டுப் பகுதிகளில் மட்டுமே விளைந்து வந்த இக்காயை, சில பகுதிகளில் மட்டும் தனியாக விளைவித்து வருகிறார்கள். 'மிதி பாகற்காய்' எனப்படும் சிறிய ரக பாகற்காய் போன்ற தோற்றத்திலும் பழுப்பு நிறத்திலும் இருப்பதால், 'பழு பாகல்' என்று அழைக்கிறார்கள். மேற்கு வங்கப்பகுதிகளில் அதிக அளவில் விளையும் இதை 'பெங்கால் பாகல்' என்றும் அழைப்பார்கள். ஆங்கிலத்தில் காக்ரோல் என்பார்கள். நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே பழுபாகற்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்