அதிகாரிகளுக்கு பணம் கொடுக்கும் வியாபாரிகளுக்கு மட்டும் சிறப்பு அனுமதி
திருமுருகன்பூண்டி நகராட்சியில் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்கும் வியாபாரிகளுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்படுவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி குற்றம் சாட்டி உள்ளார்.
திருமுருகன்பூண்டி நகராட்சியில் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்கும் வியாபாரிகளுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்படுவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி குற்றம் சாட்டி உள்ளார்.
தொடக்க விழா
திருப்பூர் திருமுருகன்பூண்டியில் இந்து வியாபாரிகள் சங்கம் தொடக்கவிழா திருமுருகன்பூண்டி டே மூன் ரெஸ்டாரண்டில் பூண்டி பகுதி பொறுப்பாளர் மோகன்தாஸ் ஏற்பாட்டில் நேற்று காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் கிஷோர்குமார் முன்னிலை வைத்தார். வியாபாரிகள் சங்க மாவட்ட பொறுப்பாளர் சுப்பிரமணி வாழ்த்து பேசினார்.
இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இந்து வியாபாரிகள் சங்கத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பணம் கொடுத்தால் சிறப்பு அனுமதி
திருமுருகன்பூண்டியில் நடை வியாபாரிகள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். தற்போது அந்த கடைகளை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளை மிரட்டி வருகின்றனர். இதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
தி.மு.க. அரசு சமத்துவமான அரசு என்றும், ஏழைகளை முன்னேற்ற பாதையில் நடத்துகிறது என்றும் கூறுகிறது. ஆனால் சின்ன, சின்ன வியாபாரிகளை வெளியேற்ற வேண்டும் என்று நினைக்க நினைக்கிறது. நகராட்சி அதிகாரிகளுக்கு தனியாக பணம் கொடுத்து கவனித்தால் வியாபாரிகளுக்கு சிறப்பு அனுமதி கொடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
அதிகாரிகளுக்கு மிரட்டல்
சிறு வியாபாரிகளுக்கு உதவி செய்வதற்கே அரசாங்கம் உள்ளது. மேலும் நகராட்சி சார்பில் வியாபாரிகளுக்கு உதவிகளும் செய்யலாம். திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவிலில் சத்துணவு வழங்குவதற்காக கோவில் இடத்தை ஆக்கிரமிக்கும் வகையில் பூண்டி நகர தி.மு.க செயலாளர் கோவில் அதிகாரிகளை மிரட்டி வருவதாகவும் தகவல் வந்துள்ளது. கோவிலுக்குரிய இடம் கோவில் பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி தி.மு.க. பொறுப்பாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதையும் இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முடிவில் திருமுருகன்பூண்டி நகர நிர்வாகி ராஜன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் நகர நிர்வாகிகள் முரளிதரன் சுரேஷ் உட்பட வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்