கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ராசையா, ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் லதா, மேலாளர் சண்முகவேல், நகர அமைப்பு அலுவலர் காஜாமைதீன், சுகாதார அலுவலர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் பிரிவு மாரியப்பன், தலைவர், துணைத் தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட நகராட்சி பகுதியில் வெறி நாய் கடியினால் பாதிப்பு ஏற்பட்டு உயிர் பலி ஏற்பட வாய்ப்புள்ளதாக தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து புகார் வரப்பெறுவதால் வெறிநாய் தாக்கத்துக்குள்ளான நாய்களுக்கு மட்டும் அரசு கால்நடை மருத்துவமனை மூலம் கருணை கொலை செய்து விட வேண்டும் என்பன உள்பட மொத்தம் 40 தீர்மானத்தையும் வாசித்தார்.
அதனைத் தொடர்ந்து அனைத்து தீர்மானங்கள் குறித்தும் உறுப்பினர்கள் முகமது அலி, யாசருக்கான் அலி, அக்பர், சுந்தர மகாலிங்கம், சுபா, ராஜேந்திர பிரசாத், மாரி முருகன், முகைதீன் கனி, சங்கரநாராயணன், அரபா வஹாப் ஆகியோர் பேசினர். இதில் அதிகமான உறுப்பினர்கள், கடையநல்லூரில் சமீபத்தில் வெறிநாய் கடித்து இறந்த பெண்ணுக்கு மாவட்ட கலெக்டர் மூலம் முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணத் தொகை பெற்று வழங்க வேண்டும் என்றனர். கூட்டத்தில் 31 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.