அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டிகள்-ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தகவல்

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டிகள் விரைவில் நடத்தப்படும் என்று நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.

Update: 2022-11-30 22:12 GMT

கபடி போட்டிகள்

விளையாட்டு, உடற்தகுதி மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு நிலை குழு சார்பில் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவிகள், இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை அதிகரிக்கவும், விளையாட்டிற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதல்-அமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டிகள் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் விரைவில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

விளையாட்டு அரங்கம்

அதே போன்று அனைத்து விளையாட்டுகளும் பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் என அனைத்து பிரிவினருக்கும் தனித்தனியே நடத்தப்பட உள்ளன. கிராமப்புறங்களில் விளையாட்டு வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு விளையாட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாவட்ட விளையாட்டு அரங்கத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நகர்ப்புறம், கிராமப்புறங்களில் உள்ள பூங்கா மற்றும் விளையாட்டு மைதானத்தை அனைவரும் பயன்படுத்தி அவரவர் உடற்திறனை மேம்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளை சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றிபெற செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் உதவி கலெக்டர் சங்கீத் பல்வந்த் வாகி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்