கிருஷ்ணகிரி நகராட்சிபணியாளர்களுக்கு குப்பை அள்ளும் வாகனங்கள் மதியழகன் எம்.எல்.ஏ. வழங்கினார்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி நகராட்சி பணியாளர்களுக்கு குப்பை அள்ளும் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை தாங்கினார். ஆணையாளர் வசந்தி முன்னிலை வகித்தார். நகர தி.மு.க. செயலாளர் நவாப் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, 12 குப்பை அள்ளும் வாகனங்களை பணியாளர்களுக்கு வழங்கினார். பின்னர் வாகனங்களை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி 15-வது மானிய குழு நிதியில் ரூ.88 லட்சம் ஒதுக்கப்பட்டு, 12 குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்கள், குப்பை அள்ளும் பிக்அப் வாகனங்கள் நகராட்சி பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நகராட்சியை தூய்மையாக வைத்துக் கொள்ளும் வகையில் பணியாளர்களுக்கு மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து வழங்கி பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றனர்.
இதில் நகராட்சி துணைத்தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாநில விவசாயி அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், அன்பரசன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.