சவுக்கு சங்கர் வழக்கில் இருந்து நீதிபதிகள் விலகல்

சவுக்கு சங்கர் வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

Update: 2024-07-26 07:29 GMT

சென்னை,

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசியதாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சவுக்கு சங்கரின் தாயார் ஏ.கமலா சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இறுதி முடிவை அறிவிக்காமல் இருக்கும் நிலையில், நாங்கள் முடிவெடுப்பது சரியல்ல என்று தெரிவித்தனர். மேலும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், சவுக்கு சங்கர் மீதான மற்ற வழக்குகளுக்கு இந்த ஜாமீன் பொருந்தாது என்று தெரிவித்தனர். அத்துடன், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவுக்கு எதிராக அவரது தாயார் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன் அடிப்படையில் இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இரண்டு பேர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக வேறொரு அமர்வு விசாரித்தது. அப்போது பதிலளிக்குமாறு காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்பாக மனுதாரர் தனது கருத்தை முன்வைத்துள்ளார். எனவே நாங்கள் இந்த வழக்கை விசாரிக்க முடியாது. வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பிவைக்கிறோம். அவர் வேறு அமர்விற்கு வழக்கை மாற்றி விடுவார் எனக்கூறி வழக்கின் விசாரணையில் இருந்து விலகினர். எனவே இந்த வழக்கு வேறு அமர்வு முன்பு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்