புதிய நீதிமன்றம் அமைய உள்ள இடத்தை நீதிபதிகள் ஆய்வு
புதிய நீதிமன்றம் அமைய உள்ள இடத்தை நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
வத்திராயிருப்பு,
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா பிரிக்கப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு வத்திராயிருப்பு தாலுகா உருவாக்கப்பட்டது. வத்திராயிருப்பு தாலுகாவில் கிருஷ்ணன்கோவில், நத்தம்பட்டி, வத்திராயிருப்பு, கூமாபட்டி ஆகிய 4 போலீஸ் நிலையங்கள் உள்ளன. வத்திராயிருப்பில் சார்பு நீதிமன்றம் இல்லாததால் இந்த போலீஸ் நிலையத்தில் பதிவாகும் வழக்குகள் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் வத்திராயிருப்பு யூனியன் அலுவலகம் பின்புறம் உள்ள பழைய தாலுகா அலுவலக கட்டிடம் சார்பு நீதிமன்றம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று அந்த இடத்தை ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம், நீதிபதி கிறிஸ்டோபர் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது வத்திராயிருப்பு தாசில்தார் உமாமகேஸ்வரி, ஸ்ரீவில்லிபுத்தூர் துணை சூப்பிரண்டு சபரிநாதன், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.