4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை- ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
4 வயது சிறுமி
ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி கேட்டுப்புதூரை சேர்ந்தவர் செல்வம் என்கிற வீராசாமி (வயது 51). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந்தேதி, மொடக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமியிடம், மிட்டாய் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி உள்ளார்.
அதைத்தொடர்ந்து வீராசாமி அந்த சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் அந்த சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தாள்.
20 ஆண்டு சிறை
இதைத்தொடர்ந்து பெற்றோர் உடனடியாக சிறுமியை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தி போக்சோ வழக்கில் செல்வம் என்கிற வீராசாமியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்து நேற்று நீதிபதி மாலதி தீர்ப்பளித்தார். சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய செல்வம் என்கிற வீராசாமிக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதியாக வழங்கிட நீதிபதி மாலதி தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.