மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை- ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2023-02-23 22:25 GMT

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

நடத்தையில் சந்தேகம்

பவானி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 37). கூலித்தொழிலாளி. இவர் பவானியை சேர்ந்த சித்ரா (34) என்பவரை கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். திருமணம் ஆனது முதல் சண்முகத்துக்கு சித்ராவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் சித்ராவை அடித்து சித்ரவதை செய்து உள்ளார்.

இதுகுறித்து பவானி போலீசில் சித்ரா தனது கணவர் மீது புகார் கொடுத்தார்.

அப்போது கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்றும் சித்ரா கூறினார். இதையடுத்து சித்ராவும், அவரது மகனும் தனியாக வசித்தனர்.

ஆயுள் தண்டனை

பவானி ராஜீவ்நகரில் சித்ரா வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினார்.அங்குள்ள ஒரு மில்லில் அவர் வேலை செய்து வந்தார். சண்முகம் தனது மகனை பார்ப்பதற்காக சித்ராவின் வீட்டுக்கு சென்று வந்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 4-ந் தேதி இரவு சித்ரா வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அவர் ராஜீவ் நகரில் சென்றபோது அங்கு நின்றிருந்த சண்முகம், சித்ராவிடம் பேசினார்.

அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சண்முகம் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து சித்ராவின் தலை உள்ளிட்ட இடங்களில் தாக்கினார். இதில் சித்ரா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்த சண்முகத்தை கைது செய்தனர். மேலும் அவர் மீது ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு கூறினார்.

அந்த தீர்ப்பில், 'மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக சண்முகத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து,' உத்தரவிட்டார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்