சொத்து தகராறில் விவசாயியை கொன்ற வழக்கில் தந்தை -மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை; ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

சொத்து தகராறில் விவசாயியை கொலை செய்த வழக்கில் தந்தை -மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2022-09-13 20:18 GMT

ஈரோடு

சொத்து தகராறில் விவசாயியை கொலை செய்த வழக்கில் தந்தை -மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

விவசாயி

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள மைலம்பாடி கொம்புக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சென்னாநாயக்கர். இவருடைய மனைவி ரங்கம்மாள் (வயது 65). இவர் அவருடைய மகன் சின்னச்சாமி (45), மருமகள் மாராக்காள் ஆகியோருடன் கொம்புக்காட்டூரில் உள்ள தோட்டத்து வீட்டில் தங்கி விவசாயம் செய்து வந்தார்.

இவர்களின் பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவரும், பங்காளியுமான நாகராஜ் (49) என்பவரிடையே இவர்களுக்கு சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இவர்களுக்கான பொது வழித்தடத்தில் தண்ணீர் குழாய் அமைப்பது தொடர்பாகவும் தகராறு ஏற்பட்டது. எனவே 2 தரப்பினரும் பவானி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்து விசாரணை நடந்தது.

இந்தநிலையில் கடந்த 6-5-2017 அன்று மதியம் 1 மணி அளவில் ரங்கம்மாளும், சின்னச்சாமியும் பொது வழித்தடம் வழியாக அங்குள்ள கிணற்றில் இருந்து நீர் பாய்ச்ச சென்றனர்.

தாக்குதல்

அவர்கள் அங்கு சென்றபோது, நாகராஜ், அவருடைய மனைவி சாந்தி (45), மகன் ஜெயக்குமார் (24), உறவினரான பிரசாந்த் என்கிற பூபதி (20) ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் சின்னச்சாமி, ரங்கம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டி, எங்கள் வழித்தடத்தில் தண்ணீர் குழாய் அமைத்து விடுவாயா என்று கூறி தகராறில் ஈடுபட்டனர். அதற்கு, சின்னச்சாமியும், ரங்கம்மாளும் நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சத்தானே குழாய் போடுகிறோம். அதற்கு ஏன் தகராறு செய்கிறீர்கள் என்று கேட்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த நாகராஜ், சாந்தி, ஜெயக்குமார், பிரசாந்த் என்கிற பூபதி ஆகியோர் சின்னச்சாமியை கடுமையாக தாக்கினார்கள். இதில் தடுக்கச்சென்ற ரங்கம்மாளுக்கும் அடி விழுந்தது. இந்த தாக்குதல் காரணமாக 2 பேரும் அலறிய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தடுத்தனர். இதற்கிடையே சின்னச்சாமியின் மீது நாகராஜ் உள்ளிட்டவர்கள் கடுமையாக தாக்கியதால் அவர் மயங்கி விழுந்தார். அவரையும், ரங்கம்மாளையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ரங்கம்மாளுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சின்னச்சாமி உடல் நிலை மோசமானதால் அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கொலை வழக்கு

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் நரம்பியல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். எனினும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே கடந்த 8-5-2017 அன்று அவர் மீண்டும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் இங்கு டாக்டர்கள் சோதனை செய்தபோது அவர் வழியிலேயே இறந்து விட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக பவானி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நாகராஜை கைது செய்தனர். தொடர்ந்து பவானி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ரங்கம்மாள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட காரணத்தால், இந்த வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

3 பேருக்கு ஆயுள் தண்டனை

வழக்கை நீதிபதி ஆர்.மாலதி விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட நாகராஜ், அவருடைய மகன் ஜெயக்குமார், உறவினர் பிரசாந்த் என்கிற பூபதி ஆகியோர் விவசாயி சின்னச்சாமியை கொலை செய்யும் நோக்கத்தில் தாக்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால் 3 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்கவும், தகாத வார்த்தைகளால் திட்டிய குற்றத்துக்காக கூடுதலாக ஒரு மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் வேண்டும் என்று நீதிபதி இந்த தீர்ப்பில் கூறிஇருந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய சாந்தி தகாத வார்த்தையால் திட்டியது, ரங்கம்மாளை தாக்கியது உள்ளிட்ட குற்றங்களை செய்ததற்காக அவருக்கு 45 நாட்கள் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஆர்.மாலதி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் எம்.ஜெயந்தி ஆஜர் ஆனார்.

விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது நேற்று பவானி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்