பெண்களுக்கான சட்டம், உரிமைகளை அறிந்து பயன்படுத்த வேண்டும் -மாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு

பெண்களுக்கான சட்டம் மற்றும் உரிமைகளை அறிந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மை நீதிபதி கூறினார்.

Update: 2023-02-25 18:45 GMT


பெண்களுக்கான சட்டம் மற்றும் உரிமைகளை அறிந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மை நீதிபதி கூறினார்.

கருத்தரங்கு

சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய மகளிர் ஆணையம் வழிகாட்டுதலின்படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு பெண்கள் நலன் குறித்த சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் சட்டசேவை நாள் முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா தலைமையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி வரவேற்று பேசினார். கருத்தரங்கை தொடங்கி வைத்து மாவட்ட முதன்மை நீதிபதி பேசியதாவது:-

பெண்களுக்கான சட்டம் தொடர்பான பிரச்சினைகள் வரும்போது யாரை அணுக வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய உரிமைகளை தெரிந்து கொண்டு அவற்றை முறையாக அந்த வரையறைக்குள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பெண்கள் பாதுகாப்பிற்கு எந்த அளவு உத்தரவாதம் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தனித்திறமை

தற்போது மாணவிகளான உங்கள் கவனம் முழுவதும் படிப்பு மற்றும் தனிப்பட்ட முன்னேற்றத்தை பற்றி மட்டும்தான் இருக்கவேண்டும். கவனத்தை சிதற விடக்கூடாது. குறுக்கு வழியில் முன்னேற நினைக்ககூடாது. அது நமக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும். நமது தனி திறமைகளை வளர்க்க வேண்டும். கஷ்டப்பட்டு கிடைக்கும் எதுவும் தகுதியானதாகதான் இருக்கும். நாம் எப்படி மற்றவர்களை பார்க்கிறோமோ அப்படிதான் உலகம் நம்மை பார்க்கும். நாம் நமது இலக்கினை அடைய தேவையான முயற்சிகளை எடுத்து வாழ்க்கையில் பாதுகாப்புடன் வெற்றிகரமாக வாழவேண்டும். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உதவியை பெண்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி மற்றும் தலைவர் பக்தவச்சலு போக்ஸே, நீதிபதி சரத்ராஜ், குடும்ப நல நீதிபதி முத்துகுமரன், மாவட்ட சமூக நல அலுவலர் அன்புகுளோரியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், சட்ட உதவி பாதுகாப்பு வழக்கறிஞர்கள் செந்தில் காளைஈஸ்வரன் கண்ணன், கிரண்காளை, மணிமேகலை, அனுசுயா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கருத்தரங்கில் பள்ளி, கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர். நிகழச்சியின் ஏற்பாட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள், தன்னார்வலர்கள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்