நீதிபதி நேரில் விசாரணை

போலீசில் ஒப்படைத்த வாலிபர் மர்மமாக இறந்த சம்பவத்தில் நீதிபதி நேரில் விசாரணை நடத்தினார். இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

Update: 2022-09-16 18:33 GMT

அருப்புக்கோட்டை

போலீசில் ஒப்படைத்த வாலிபர் மர்மமாக இறந்த சம்பவத்தில் நீதிபதி நேரில் விசாரணை நடத்தினார். இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

திடீர் சாவு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 30). பி.காம் பட்டதாரியான இவருக்கு கோகிலாதேவி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் சாயப்பட்டறையில் பணிபுரிந்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி தங்கபாண்டி எம்.டி.ஆர். நகரில் உள்ள சமையல் தொழிலாளி வீட்டிற்குள் நுழைய முயன்றதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் அவரை பிடித்து டவுன் போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணைக்கு பின்னர் அவரை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

ஆனால் மறுநாள் அதிகாலை தங்கப்பாண்டிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் இதனை ஏற்க மறுத்து தங்கப்பாண்டியின் உறவினர்கள் அவர் கொலை செய்யப்பட்டதாக கோரி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடலில் காயம் உள்ளதா என விசாரணை

இந்தநிலையில் நேற்று தங்கப்பாண்டி உடல் வைக்கப்பட்டிருக்கும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நீதிபதி முத்து இசக்கி வந்தார். அவரிடம் தங்கப்பாண்டி மனைவி கோகிலா தேவி மற்றும் உறவினர்கள் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மனு அளித்தனர். மேலும் காப்பகத்தில் இருந்து போலீஸ் நிலையம் கொண்டு வந்த நேரத்திற்குப்பின் இரவு 9 மணி முதல் இரவு 1 மணி வரை என்ன நடந்தது என்பது குறித்து ஆவணங்கள் வேண்டியும் மனு அளித்தனர்.

இதைதொடர்ந்து உரிய விசாரணை நடத்தப்படும் என நீதிபதி கூறினார். இதையடுத்து தங்கப்பாண்டியின் உறவினர்கள் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதித்தனர். முன்னதாக நீதிபதி முத்து இசக்கி, தங்கப்பாண்டியனின் உடலில் ஏதேனும் காயம் இருக்கிறதா? என விசாரணை மேற்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்