கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்

மயிலாடுதுறை மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

Update: 2023-05-17 18:45 GMT

பொறையாறு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

ஆய்வு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி, ராமலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பூம்புகார் நிவேதா முருகன், சீர்காழி பன்னீர்செல்வம், மயிலாடுதுறை ராஜகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் துளசிரேகா ரமேஷ், ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி குமரவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி

பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க இன்று (நேற்று) மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளடக்கிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முதல்வரின் உன்னத திட்டமான காலை உணவு திட்டம் அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு சிறந்த உட்கட்டமைப்பு உருவாக்க புதிய வகுப்பறை கட்டிடம், சமையல் கூடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

90 சதவீத பணிகள் நிறைவு

ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 6 ஆயிரம் வகுப்பறை கட்டிடங்கள் ரூ.823 கோடி மதிப்பீட்டில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி கன்னியாகுமரி முதல் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இப்பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு வருகிற ஜூன் மாதம் கலைஞரின் நூற்றாண்டு விழா தொடக்க நாளில் மாணவர் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இப்பணிகளை ஆய்வு செய்ய அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வருகிறேன். இன்னும் 15 நாட்களில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணி நிறைவடையும். இதுவரை 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் 2 லட்சத்து 23 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பட்டா வழங்காமல் உள்ளவர்களுக்கு மிக விரைவில் பட்டா வழங்கப்படும்.

தமிழகம் முழுவதும் 1296 மேல்நிலை நீர்தேக்க தொட்டி ரூ.209 கோடி செலவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மிக விரைவில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். சாராயம் விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறுவது அரசியலுக்கு எடுப்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வு

முன்னதாக பொறையாறு அருகே ரூ.4½ கோடியில் புதிதாக வீடு கட்டும் பணிகளை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு செய்தார். தொடர்ந்து செம்பனார்கோவில் ஒன்றியம் காழியப்பநல்லூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் அய்யனார்கோவில் குளத்தை தூர்வாரி மேம்படுத்தும் பணியையும் ஆய்வு செய்தார். திருக்கடையூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.45½ லட்சம் மதிப்பில் 4 வகுப்பறைகள் மற்றும் ரூ.7.43 லட்சம் மதிப்பில் சமையல் கூடம் கட்டும் பணிகளையும் அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்