இந்திய அரசு வேண்டுகோள் விடுத்தால் அனைத்து துறைகளிலும் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு - மலேசிய அமைச்சர்...!

இந்திய அரசு வேண்டுகோள் விடுத்தால் மலேசியாவில் அனைத்து துறைகளிலும் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என மலேசிய மனிதவள அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-06-24 11:11 GMT

ராமநாதபுரம்,

மலேசிய நாட்டின் மனிதவள அமைச்சராக இருப்பவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன். இவருக்கு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மலேசியாவில் சென்று பணிபுரியும் தொழிலாளர்கள் சார்பில் ராமநாதபுரத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது டத்தோஸ்ரீ எம்.சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இன்னும் 10 ஆண்டுகளில் 4-வது தொழில் புரட்சி ஏற்பட இருக்கிறது. இந்தத் தொழிற்புரட்சி உலகத்தையே புரட்டிப் போடப் போகிறது. இந்தத் தொழில் புரட்சியை எதிர்கொள்ள தமிழர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் அனைத்துத் துறைகளும் முழுக்க முழுக்க எந்திரமயமாகும் சூழல் ஏற்படும் என்பதால் தமிழர்கள் தங்களை அதற்குத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவில் வேலைக்கு வரும் தமிழர்களுக்கு உதவுவதற்காக மலேசியாவில் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு எதிரான எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் புகார் தெரிவிக்க இந்த செயலியை தொழிலாளர்கள் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு இந்த செயலி மூலம் அளிக்கப்படும் புகாருக்கு 7 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்மைக் காலமாக இந்த செயலி மூலம் அளிக்கப்பட்ட 15,000 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் தமிழர்கள் உணவகம் மற்றும் மின் கம்பங்கள் பொருத்தும் பணி ஆகியவற்றில் மட்டுமே தற்போது ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு,

"இந்த இரு துறைகளில் பணியாற்றுவதற்கு மட்டும்தான் இந்திய அரசுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்திய அரசு மலேசிய அரசை கேட்டுக் கொண்டால் அனைத்துத் துறைகளிலும் பணிபுரிய தமிழர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்