வேடசந்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டுக்குள் புகுந்து 43 பவுன் நகைகள், ரூ.18 லட்சம் கொள்ளை

வேடசந்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டுக்குள் புகுந்து 43 பவுன் நகைகள், ரூ.18 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. குழந்தைகள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-12-26 16:20 GMT

வேடசந்தூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டுக்குள் புகுந்து 43 பவுன் நகைகள், ரூ.18 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. குழந்தைகள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ரியல் எஸ்டேட் அதிபர்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சாலையூர் நால்ரோடு பகுதியில் தோட்டத்து வீட்டில் வசித்து வருபவர் சீனிவாசன் (வயது 40). ரியல் எஸ்டேட் அதிபர். அவருடைய மனைவி கலையரசி (35). இந்த தம்பதிக்கு தனுஸ்ரீ (14) என்ற மகளும், ராமச்சந்திரன் (7) என்ற மகனும் உள்ளனர்.

நேற்று இரவு சீனிவாசன் வேலை விஷயமாக வெளியே சென்றுவிட்டார். வீட்டில், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் மட்டும் இருந்தனர். அப்போது முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட கும்பல், வீட்டின் பின்புறம் வழியாக காம்பவுண்டு சுவர் ஏறி குதித்தனர்.

பின்னர் அவர்கள், சாத்தி கிடந்த கதவை திறந்து வீட்டுக்குள் புகுந்தனர். இதனை பார்த்த கலையரசியும், அவரது குழந்தைகளும் அதிர்ச்சியடைந்து அலறினர். உடனடியாக, அந்த கும்பலை சேர்ந்தர்கள் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டனர்.

நகை, பணம் கொள்ளை

பின்னர் குழந்தைகள் தனுஸ்ரீ, ராமச்சந்திரன் ஆகியோரை 2 பேர் பிடித்து கொண்டனர். மேலும் அவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து, வீட்டில் உள்ள நகை-பணத்தை எடுத்து தருமாறு கூறி கலையரசியை மிரட்டினர்.

அதற்கு அவர் வீட்டில் நகை, பணம் எதுவும் இல்லை என்று கூறினார். ஆனால் அந்த கும்பலை சேர்ந்த 3 பேர் வீட்டுக்குள் இருந்த பீரோக்களை திறந்து நகை, பணத்தை தேடி பார்த்தனர். அப்போது பீரோவின் லாக்கரில் தங்க நகைகள், பணம் இருந்தது. அதனை, கொள்ளையர்கள் அள்ளினர்.

அதன்பிறகு கலையரசி அணிந்திருந்த நகையை கழற்றி தரும்படி மிரட்டினர். இதனால் அவரும் பயந்து போய் தனது நகைகளை கழற்றி கொடுத்தார். அதன்படி மொத்தம் 43 பவுன் நகைகள் மற்றும் ரூ.18 லட்சம் பணத்தை அவர்கள் கொள்ளையடித்தனர்.

செல்போன்கள் பறிப்பு

கொள்ளையடித்த நகை, பணத்தை தாங்கள் கொண்டு வந்த பையில் வைத்து வீட்டை விட்டு அவர்கள் வெளியேறினர். மேலும் அவர்கள் செல்லும்போது வீட்டில் இருந்த 2 செல்போன்களையும் பறித்தனர். கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு அங்கிருந்து நகை, பணத்துடன் அவர்கள் சென்று விட்டனர்.

இதனால் பூட்டிய வீட்டுக்குள் கலையரசி மற்றும் அவர்களது குழந்தைகள் தவித்தனர். அவர்கள், தங்களை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபயகுரல் எழுப்பினர். இருப்பினும், சீனிவாசனின் வீட்டருகே வேறு வீடுகள் இல்லாததால் யாருக்கும் சத்தம் கேட்கவில்லை.

சிதறி கிடந்த பொருட்கள்

இந்தநிலையில் சிறிது நேரத்தில் சீனிவாசன் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது, வீட்டு கதவை திறந்து அவர் உள்ளே சென்றார். அங்கு கலையரசியும், அவரது குழந்தைகளும் பயத்துடன் இருந்தனர். வீட்டுக்குள் பொருட்கள் சிதறி கிடந்ததை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தனது மனைவி மற்றும் குழந்தைகளிடம் கேட்டார். இதனையடுத்து நடந்த சம்பவம் குறித்து தனது கணவரிடம் கலையரசி கூறினார். இதுதொடர்பாக வேடசந்தூர் போலீஸ் நிலையத்துக்கு சீனிவாசன் தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

டி.ஐ.ஜி. விசாரணை

கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ரூபேஷ் குமார் மீனா, திண்டுக்கல் மாவட்ட சூப்பிரண்டு பாஸ்கரன், கூடுதல் சூப்பிரண்டு சந்திரன், வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி, வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் சீனிவாசனின் வீட்டுக்கு வந்து பார்வையிட்டனர்.

மேலும் கொள்ளை சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதேபோல் தடயவியல் நிபுணர்கள் வந்து, வீட்டில் தடயங்களை சேகரித்தனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கண்காணிப்பு கேமராக்கள்

இதற்கிடையே அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் காரில் வந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதனால் சம்பவம் நடந்த நேரத்தில், அந்த வழியாக சென்ற வாகனங்கள் குறித்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சீனிவாசன், அப்பகுதியில் உள்ள ஒரு நிலத்தை வாங்க முடிவு செய்திருக்கிறார். இதற்காக கடந்த 19-ந்தேதி வங்கியில் இருந்து ரூ.18 லட்சத்தை எடுத்து வந்ததாக தெரிகிறது. ஆனால் அந்த நிலத்தை அவர் வாங்கவில்லை.

இதனால் அந்த பணத்தை வங்கியில் செலுத்தாமல் தனது வீடடிலேயே வைத்திருக்கிறார். எனவே அவருக்கு தெரிந்த நபர்கள் யாரேனும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்களா? அல்லது வடமாநில கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களா? என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்