போலீஸ் சோதனையில் சிக்கிய நகைகள்
திருட்டு புகாரில் திடீர் திருப்பமாக சம்பவம் நடந்த வீட்டில் போலீசார் சோதனையிட்டதில் அனைத்து நகைகளும் சிக்கின.
நகை, பணம் திருட்டு
திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது 72). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருடைய மனைவி ருக்மணி (68). இவர்களது மகள் சரண்யா (38). இவர்கள் தங்கியிருக்கும் வீட்டின் மாடியில் சரண்யா வசிக்கிறார். இவர் ஆடை வடிவமைப்பு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர், பதற்றத்துடன் திண்டுக்கல் மேற்கு போலீஸ் நிலையம் வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில், தனது வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள், ரூ.25 லட்சம் பணம் ஆகியவை கொள்ளை போனதாக தெரிவித்தார். இதையடுத்து அவரை அமைதிப்படுத்திய போலீசார் உடனடியாக அவருடைய வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்தன.
நகைகள் சிக்கின
இதையடுத்து நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் முதற்கட்ட விசாரணையில் இறங்கினர். அதே நேரம் சரண்யாவுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் அவரை அச்சப்பட வைப்பதற்காக இந்த சம்பவத்தை அரங்கேற்றி இருப்பார்களோ? என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய வீட்டில் சோதனையிட முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று மாலையில் சரண்யாவின் வீட்டில் சல்லடை போட்டு போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு எதுவும் போலீசாருக்கு சிக்கவில்லை. பின்னர் வீட்டின் மொட்டை மாடிக்கு போலீசார் சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒரு பை இருப்பதை கண்டுபிடித்தனர். உடனே அந்த பையை போலீசார் திறந்து பார்த்த போது அதில் 50 பவுன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது.
விசாரணை
அதனை போலீசார் கைப்பற்றினர். சரண்யா கொடுத்த புகாரில் ரூ.25 லட்சம் மற்றும் 50 பவுன் நகைகள் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் போலீசாரிடம் சிக்கிய பையில் ரூ.3 லட்சம் மட்டுமே இருந்தது. இதனால் மீதி பணத்தை மர்ம நபர் எடுத்துச்சென்றுவிட்டாரா? அல்லது சரண்யா தவறுதலாக அந்த தொகையை குறிப்பிட்டு விட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் திவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.