பெண்ணிடம் 10½ பவுன் நகை திருட்டு

சேலத்தில் பெண்ணிடம் 10½ பவுன் நகை திருட்டு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-05-02 20:09 GMT

சேலத்தில் பெண்ணிடம் 10½ பவுன் நகை திருட்டு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தவறி விழுந்தனர்

சேலம் கிச்சிப்பாளையம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சத்தியநாராயணன். இவருடைய மனைவி சரளா (வயது 48). இவர் கடந்த 30-ந் தேதி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்கிருந்து சேலத்துக்கு தனியார் பஸ்சில் வந்தார். பின்னர் அவர் சீலநாயக்கன்பட்டியில் இருந்து டவுன் பஸ்சில் ஏறி புலிகுத்தி தெரு பஸ் நிறுத்தத்தில் இறங்கினார்.

இதையடுத்து கணவரை அங்கு வரவழைத்து அவரது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். கிச்சிப்பாளையம் மெயின் ரோட்டில் சென்ற போது அவர்கள் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தனர். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவர்களுக்கு உதவி செய்தனர்.

10½ பவுன் திருட்டு

இதையடுத்து வீட்டுக்கு சென்ற சரளா தன்னுடைய பையில் இருந்த துணிமணியை வெளியே எடுத்து வைத்தார். அப்போது பையில் இருந்த நகை பாக்சை காணவில்லை. இதில் 10½ பவுன் நகை இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சரளா இந்த திருட்டு குறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், அவரது நகை எங்கு வைத்து திருட்டு போனது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்