பெரியகுளம் அருகே தலைமை ஆசிரியை வீட்டில் நகை திருட்டு

பெரியகுளம் அருகே தலைமை ஆசிரியை வீட்டில் நகை திருடுபோனது.

Update: 2023-07-31 21:00 GMT

பெரியகுளம் அருகே தலைமை ஆசிரியை வீட்டில் நகை திருடுபோனது.

தலைமை ஆசிரியை

பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் சரவணன். இவர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி சுமதி (வயது 53). இவர், பெரியகுளம் அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சரவணன் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றார். இதற்கிடையே நேற்று முன்தினம் சரவணன் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

நகை திருட்டு

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது குறித்து சரவணனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் தனது வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டுக்குள் சென்று அவர் பார்த்தபோது, பீரோவில் இருந்த 6½ பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது.

வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் சுமதி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்