ரூ.46 லட்சம் மதிப்புள்ள 137 பவுன் நகைகள் மீட்பு

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் திருடப்பட்ட ரூ.46 லட்சம் மதிப்புள்ள 137 பவுன் நகைகளை ராமநாதபுரத்தில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

Update: 2023-03-03 18:45 GMT

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் திருடப்பட்ட ரூ.46 லட்சம் மதிப்புள்ள 137 பவுன் நகைகளை ராமநாதபுரத்தில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

137 பவுன் மீட்பு

ராமநாதபுரம் வந்த தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் டி.ஐ.ஜி.துரை, போலீஸ் சூப்பிரண்டுகள் ராமநாதபுரம் தங்கதுரை, சிவகங்கை செல்வராஜ் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பல்வேறு குற்ற சம்பவங்களில் திருடு போய் போலீசாரால் மீட்கப்பட்ட ரூ.46 லட்சம் மதிப்புள்ள 137 பவுன் தங்க நகைகளை உரியவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கடந்த 3 மாதங்களில் திருடப்பட்ட ரூ.46 லட்சம் மதிப்பிலான 137 பவுன் நகைகள் மற்றும் பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளோம். மாநிலம் முழுவதும் ரூ.29 கோடி மதிப்பிலான நகைகள், பொருட்கள், வாகனங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொய்யான வீடியோ

தமிழகத்தில் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் வந்து வேலைபார்த்து வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பாக தங்களின் பணியை செய்து வருகின்றனர். சமீப காலமாக தமிழகத்தில் பிற மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தவறான, பொய்யான செய்தி வீடியோவை பரப்பி வருகின்றனர். இதுபோன்று தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது வழக்குபதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

போலீசார் லத்தியால் தாக்கி பிடிக்க முடியாத சூழ்நிலையில்தான் துப்பாக்கியால் சுட்டு ரவுடிகளை பிடிக்கின்றனர். ராமநாதபுரத்தில் 12-வது பட்டாலியன் கட்டுமான பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. ஆயிரத்து 200 போலீசார் இங்கு இருப்பார்கள். போலீஸ் நிலையங்களில் துன்புறுத்துவதோ, மரணம் ஏற்படுவதோ இந்த ஆண்டு இதுவரை எந்த நிகழ்வும் நடைபெறவில்லை. சென்ற ஆண்டு 4 நிகழ்வுகள் நடந்தது. அதில் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கு முன்னர் ஆண்டுக்கு 14 பேர் வரை உயிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்காணிப்பு கேமராக்கள்

முதல்-அமைச்சர் அனைத்து காவல் சரகங்களுக்கும் சென்று ஆய்வு செய்து வருகிறார். அதற்கு முன்னோட்டமாக நான் காவல்நிலையங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறேன். வாகனங்களில் செல்லும்போது சீட்பெல்ட், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசம் கட்டாயம் அணிந்தால்தான் அதனை பார்த்து மற்றவர்களும் அணிவார்கள். முகத்தை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும் வகையில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக ராமநாதபுரம் வந்த டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.துரை, போலீஸ் சூப்பிரண்டுகள் ராமநாதபுரம் தங்கதுரை, சிவகங்கை செல்வராஜ் ஆகியோர் வரவேற்றனர். ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்ட சைலேந்திரபாபு சிறப்பாக பணியாற்றிய 30 போலீசாருக்கு சான்றிதழ்களை வழங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்