வீடியோ வெளியிட்டு நகை மதிப்பீட்டாளர் தற்கொலை: ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர், குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை

சேலத்தில் வீடியோ வெளியிட்டு நகை மதிப்பீட்டாளர் தற்கொலை செய்த வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-06-19 21:57 GMT

தற்கொலை

சேலம் ஜாகீர்அம்மாபாளையம் பொன்நகரை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 50). சேலத்தில் உள்ள ஒரு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி இமாகுலேட். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மோகன்தாஸ், வீடியோ ஒன்றை வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த 40 பவுன் நகை மற்றும் பணத்தை என் மனைவி, எனக்கு தெரியாமல் சிலருக்கு கொடுத்து விட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்திய சூரமங்கலம் போலீசார், பணம் பெற்றுக்கொண்ட ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு ஆதரவாக பேசினர். தற்போது எனது மகள் 12-ம் வகுப்பும், மகன் 10-ம் வகுப்பும் முடித்து விட்டனர். அவர்களை உயர்கல்வியில் சேர்க்க என்னிடம் பணம் இல்லை.

3 பேர் காரணம்

கடன் வாங்கியவர்களிடம் பணத்தை திருப்பி கேட்டால் அவர்கள் பணத்தை தர மறுப்பதோடு மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே, நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன். எனது தற்கொலைக்கு ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டும் தான் காரணம்.

எனவே இதுகுறித்து விசாரித்து அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். எங்களிடம் ஏமாற்றிய நகை, பணத்தை மீட்டு குழந்தைகளின் படிப்பு செலவுக்கு வாங்கி கொடுங்கள்.

இவ்வாறு அவர் வீடியோவில் உருக்கமாக பேசி உள்ளார்.

இது தொடர்பாக சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் வீடியோவில் குறிப்பிட்டுள்ள சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்