மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: தலைமறைவான வாலிபர்கள் 2 பேர் கைது

மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறித்து 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-12 20:12 GMT


மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறித்து 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நகை பறிப்பு

மதுரை புதூர் சூர்யா நகர், பொன்விழா நகரை சேர்ந்தவர் அகிலாண்டேஸ்வரி (வயது 39). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்து விட்டார். மகன் கோவையில் படித்து வருகிறார். மகள் திருமணம் முடிந்து கணவருடன் வெளியூரில் உள்ளார். சம்பவத்தன்று அகிலாண்டேஸ்வரி ஓட்டலில் சாப்பாடு வாங்கி கொண்டு வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் பின்தொடர்ந்து வந்தனர்.

அவர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் திடீரென்று அகிலாண்டேஸ்வரி கழுத்தில் அணிந்து இருந்த 1½ பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி விட்டார். இது குறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சம்பவம் நடந்து 2½ மாதங்களுக்குமேல் ஆகியும் குற்றவாளிகளை பிடிக்க வில்லை. எனவே இதில் தொடர்பு உடையவர்களை உடனே கைது செய்யுமாறு போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

கண்காணிப்பு

அதன்பேரில் வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் சங்கிலி பறிப்பில் தொடர்புடைய குற்றவாளிகள் யார் என்பது அடையாளம் தெரியவந்தது. அவர்கள் சம்பவத்திற்கு பின்னர் மதுரைக்குள் வராமல் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்கள் 2 பேரும் மதுரை வந்தது தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.

கைது

உடனே போலீசார் வீட்டில் பதுங்கி இருந்த புதூர் மூன்றுமாவடி ரோடு மகாலட்சுமி நகரை சோந்த உப்பிலி மாடசாமி என்ற மருது (25), வளர்நகர் அம்பலகாரன்பட்டி நவநீதன் (23) ஆகியோரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் தான் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். அதை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து கைது செய்த தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்