ரெயில் முன்பு பாய்ந்து நகைக்கடை உரிமையாளர் தற்கொலை:போலீசாரின் துன்புறுத்தல் காரணமா?
நகைக்கடை உரிமையாளர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதற்கு போலீசாரின் துன்புறுத்தல் காரணமா? என்பது குறித்து வருகிற 25-ந் தேதி ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற உள்ளதால் சாட்சியம் அளிக்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நகைக்கடை உரிமையாளர் தற்கொலை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தேரடி தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது62). இவர் நகைக்கடை நடத்தி வந்தார். இவர் கடந்த மாதம் 25-ந் தேதி செட்டியக்காடு என்ற இடத்தில் வேளாங்கண்ணி-எர்ணாகுளம் ரெயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக போலீஸ் நிலைய ஆணை எண் 151-ன் கீழ் விசாரணை நடத்த தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆணையிட்டார்.
சாட்சியம் அழைக்கலாம்
அதன்படி பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற 25-ந் தேதி மாலை 4 மணிக்கு வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற உள்ளது. எனவே ராஜசேகர் மரணத்தில் போலீஸ்துறையின் துன்புறுத்தல், அச்சுறுத்தல் மற்றும் அத்துமீறல்கள் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா? என்பது குறித்து விரிவான விசாரணை நடைபெற உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விவரங்கள் தெரிவிக்க விரும்புகிற பொதுமக்கள் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரிடம் (ஆர்.டி.ஓ.) நேரில் சாட்சியம் அளிக்கலாம். சாட்சியம் அளித்த தகவல்களுக்கான ரகசியங்கள் பாதுகாக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.