மின்வாரிய அதிகாரி வீட்டில் நகை கொள்ளை

பழனியில், மின்வாரிய அதிகாரி வீட்டில் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2023-02-20 19:00 GMT

ஓய்வுபெற்ற அரசு அதிகாரி

திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 68). ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி. அவருடைய மனைவி காமாட்சி (62). ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியை. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இதில் ஒரு மகன் கோவையிலும், மற்றொரு மகன் அமெரிக்காவிலும் வேலை செய்கின்றனர்.

கடந்த 18-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு பாலசுப்பிரமணியன் தனது மனைவியுடன் அமெரிக்கா செல்ல 'விசா' புதுப்பிப்பதற்காக சென்னைக்கு சென்றார். இந்நிலையில் நேற்று காலை பாலசுப்பிரமணியனின் வீட்டில் வேலை செய்யும் பாண்டியன் நகரை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டின் ஜன்னல் கதவுகள் உடைக்கப்பட்டும், பின்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதையும் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் பழனி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

6½ பவுன் நகை கொள்ளை

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். விசாரணையில், பாலசுப்பிரமணியனின் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

பின்னர் பீரோ மற்றும் அலமாரியில் இருந்த 6½ பவுன் நகையை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து திண்டுக்கல்லில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். அதேபோல் மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. வீட்டில் இருந்து மோப்ப நாய் ரெட்கிராஸ் ரோடு வரை ஓடி சென்று நின்றது. ஆனால் யாரையும் மோப்ப நாய் கவ்வி பிடிக்கவில்லை. பழனியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்