செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் நகை கொள்ளை

விருத்தாசலம் செல்வமுத்து மாரியம்மன் கோவில் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

Update: 2022-11-03 18:45 GMT

விருத்தாசலம்,

விருத்தாசலம் வ.உ.சி. நகரில் செல்வமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த கோவிலின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் அம்மன் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்க தாலி மற்றும் பித்தளை மணியை கொள்ளையடித்தனர். பின்னர் அவர்கள் கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலையும் பெயர்த்து எடுத்துச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து கோவில் பூசாரி தனவேல் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோவிலை பார்வையிட்டதோடு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மணிமுக்தா ஆறு பகுதியில் உண்டியல் ஒன்று உடைக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, அந்த உண்டியல் செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது என்பதும், மர்மநபர்கள் அந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் விருத்தாசலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்