சிதம்பரத்தில் பட்டப்பகலில் துணிகரம்:அண்ணாமலை பல்கலைக்கழக அதிகாரி வீட்டில் நகை கொள்ளைமர்மநபர்கள் கைவரிசை

சிதம்பரத்தில் அண்ணாமலை பல்லைக்கழக அதிகாரி வீட்டில், மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2023-01-03 19:53 GMT


சிதம்பரம்,

சிதம்பரம் காமராஜர் நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் காசிநாதன் மகன் செந்தில்நாதன் (வயது 38). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கவிதா. இவர் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் ஆக பணி செய்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று காலை, தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு, கணவன் மனைவி இருவரும் வழக்கம் போல் பணிக்கு சென்றனர்.

தொடர்ந்து மதியம், பணி முடிந்து, கவிதா வீட்டுக்கு வந்தார். அப்போது முன்பக்க கதவை திறந்தார் ஆனால் அவரால் திறக்க முடியவில்லை. உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

நகை கொள்ளை

இதுபற்றி கவிதா, செந்தில்நாதனுக்கு போன் செய்து தெரியப்படுத்தினார். அதன்பேரில் அவரும் அங்கு வந்தார். பின்னர், பின்பக்க வாசல் வழியாக செல்வதற்காக கணவன், மனைவி இருவரும் சென்றனர். அப்போது, பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உள்ளே சென்று பார்த்தனர். அங்கிருந்த பீரோ கதவு திறந்த நிலையில், அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிகிடந்தன. மேலும், அங்கிருந்த 8 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

பின்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் முன்பக்க கதவை உள்பக்கமாக பூட்டி வைத்துவிட்டு, நகையை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

போலீஸ் வலைவீச்சு

இதுகுறித்து அவர், சிதம்பரம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, பார்வையிட்டு விசாரித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்